திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா? போலீஸார் குவிப்பு... பாஜக தலைவர்கள் தடுத்து நிறுத்தம்!

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, தமிழக அரசின் சீராய்வு மனு, பாஜக தலைவர்கள் தடுத்து நிறுத்தம் எனப் பரபரப்பான சூழலில் திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Nov 24, 2026 - 13:58
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா?  போலீஸார் குவிப்பு... பாஜக தலைவர்கள் தடுத்து நிறுத்தம்!

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் இடைக்காலத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.இத்தகைய சூழலில், திருப்பரங்குன்றத்தில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக சுமார் 7,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து 3,000 போலீஸாரும், வெளிமாவட்டங்களில் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவடி, தாம்பரம், பூந்தமல்லி, ஊனமாஞ்சேரி, சென்னை ரயில்வே, வீரபாண்டி, தொண்டி, நாகை, கோவை, நீலகிரி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 16 பட்டாலியன் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், தெற்கு, வடக்கு, மேற்கு மண்டலங்களைச் சேர்ந்த உயர் காவல்துறை அதிகாரிகளும் திருப்பரங்குன்றத்தில் முகாமிட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் நகர் பகுதி, கோயில் வளாகம், மலையடிவாரப் பாதைகள், மலைச்சுற்றுப் பகுதிகள், மலையில் உள்ள தீபத்தூண், தர்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலை உச்சியில் மட்டும் 600 போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

உச்சிப் பிள்ளையார் கோயில், தீபத்தூண், நெல்லித்தோப்பு, தர்கா மலைக்குச் செல்லும் பழனி ஆண்டவர் கோயில் அடிவாரப் பாதை, படிக்கட்டுப் பாதை உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

காவல்துறை உயர் அதிகாரிகள் திருப்பரங்குன்றம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கோயில் மற்றும் மலைப்பாதைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகளைப் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வழக்கம்போல் மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் முன்பு தீபம் ஏற்றுவதற்கான தாமிரக் கொப்பரை, நெய், திரி உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, திருப்பரங்குன்றத்திற்குச் செல்ல முயன்ற பாஜக தலைவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் உள்ள அவரது வீட்டில் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு அக்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல், அன்னூரில் முன்னாள் அமைச்சர் எல். முருகனும் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றத்திற்குச் செல்ல முயன்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் எச்சரித்ததாக பாஜக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய பதற்றமான சூழலில், திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அரசு அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனால், திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow