சாலையில் பறந்த கார்.. மதுரையில் நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி
மதுரை திருமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல். தனது குடும்பத்தினருடன் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பூ மிதி திருவிழாவில் பங்கேற்க நேற்று சென்றிருந்தார். சாமி தரிசனம் செய்தவிட்டு இன்று (ஏப்ரல் 10) காலை தளவாய்புரத்திலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கார் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
மதுரை நோக்கி காரில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த கனகவேலின் கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. எதிரே இருந்த தடுப்பு சுவரில் மோதி பறந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கனகவேல்(61), அவரது மனைவி கிருஷ்ணகுமாரி(56), மருமகள் நாகஜோதி(28) மற்றும் இரட்டை பிறவிகளான சிறுமிகள் சிவஸ்ரீ(8), சிவஆத்மிகா(8) ஆகியோர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற கொய்யாப்பழ வியாபாரி பாண்டியும் உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த காரால் கண்ணிமைக்கும் நேரத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரை ஓட்டி வந்த கனகவேலின் மகன் மணிகண்டன்(32) சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?