காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம் ! படுபிஸியில் சமையலறைகள் !
காமராஜர் காலை உணவுத் திட்டதின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் இன்று மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று காலை நடைபெறுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் காலை 8.30 மணியளவில் தொடங்கி வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள காலை உணவுகளை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி தொடர்ச்சிக்கான திட்டம் :
பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக கடந்த 2022-ம் ஆண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது 37 ஆயிரத்து 447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 19.34 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் :
இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூடுதலாக 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். விரிவாக்கப்பட்ட திட்டத்துக்காக ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவ, மாணவிகள் காலை உணவுத் திட்டத்தின் பயனாளிகளாக மாற உள்ளனர்.
காமராஜர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டம் :
காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயரிடப்பட்ட நிலையில், தற்போது அதன் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக இந்த திட்டம் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதலமைச்சர் விஜய் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பயணமாக லண்டன் சென்றிருந்ததால், தொடக்க விழா தேதி மாற்றப்பட்டு இன்று நடைபெறுகிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் :
விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற வகையில் சத்தான உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, திங்கட்கிழமைகளில் உப்புமாவும், செவ்வாய்க்கிழமைகளில் கிச்சடியும், புதன்கிழமைகளில் பொங்கலும் வழங்கப்படும்.
அதேபோல், வியாழக்கிழமைகளில் மீண்டும் உப்புமாவும், வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு விருப்பமான இனிப்பு வகை உணவும் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு தரமான மற்றும் சத்தான காலை உணவு கிடைக்கும் வகையில் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் ஏற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் தற்காலிக விலக்கு :
சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் (செங்கல்பட்டு) மற்றும் தாராபுரம் (திருப்பூர்) பகுதிகளை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
மாணவர்களின் உடல் நலம், கல்வி தொடர்ச்சி மற்றும் பள்ளி வருகையை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால், அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
What's Your Reaction?