TVK 100 Days: குற்றங்களை லிஸ்ட் போட்ட TTV… என்னது இவ்வளவு குற்றங்களா?

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Aug 17, 2026 - 15:30
TVK 100 Days: குற்றங்களை லிஸ்ட் போட்ட TTV… என்னது இவ்வளவு குற்றங்களா?

இதுதொடர்பாக, அம்முக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைந்து இன்றோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. முதல் 100 நாட்களில் வாக்களித்த மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டிய அரசு, ஏமாற்றத்தையும், அதிருப்தியையுமே விதைத்துள்ளது.

அரசு நிர்வாகத்தை முதல் 100 நாட்களில் முழுமையாக மதிப்பிட முடியாது என்றாலும், அந்த அரசு செல்லும் திசையை குறிப்பிட்ட நாட்களில் நிச்சயமாக கண்டறிய முடியும். இந்த 100 நாட்களில் மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசு நிர்வாகம், தனக்கும் மக்கள் நலனுக்கும் எந்தவகையிலும் சம்பந்தமேயில்லாதைப் போல சமூகவலைத்தளத்தில் ரீல்ஸ் போடுவதையே பிரதான வேலையாக செய்துவந்துள்ளது.

அந்த வகையில் கடந்த 100 நாட்களில்...

  • கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு. புதிதாக காவலர்களை நியமிக்காமல், இருக்கும் காவலர்களை வைத்தே புதிய அதிரடிப்படை என்ற வேடிக்கை அறிவிப்பு.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அமைச்சர், ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்த பின்னும் எந்தவித விசாரணையும் இல்லை.
  • பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி பட்டிதொட்டி எங்கும் பரவியிருக்கும் போதைப் பொருள் கலாச்சாரம். இதை குறித்து தகவல் தரும் மாணவர்கள் படுகொலை.
  • போதைப்பொருள் விற்பனை தொடங்கி பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் வரை ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு.
  • தற்போதைய அமைச்சர் ஒருவர், தேர்தலுக்கு முன்பாக உடல்நலம் சரியில்லாத தனது குழந்தையை கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் சென்று வெள்ளை நிற பவுடரை தனது ATM கார்டு மூலம் உடைத்துத் தந்ததை அவரே THUG MOMENT என ரீலாக வெளியிட, அது போதைப்பொருளோ? என பலர் சந்தேகம் எழுப்பியும் இதுவரை எந்த விசாரணையும், நடவடிக்கையும் இல்லை.
  • விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்து விட்டு ஆட்சிக்கு வந்த பின்பு குளறுபடியோடு அறிவிக்கப்பட்ட தள்ளுபடி. இன்று வரை விவசாயிகள் போராடியும் எந்தப்பயனும் இல்லை.
  • காவிரி நதிநீர், மேகதாது அணை மற்றும் குறுவை சாகுபடி விவகாரத்தில் தொடரும் அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு.
  • மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிக்கு மாறாக 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவசம் என ஏமாற்று அறிவிப்பு.
  • முதலமைச்சர் தொகுதியில் தொடங்கி, அனைத்து பகுதிகளிலும் அறிவிக்கப்படாத இரவுநேர மின்வெட்டு.
  • தமிழகம் எங்கும் திடீரென உயர்த்தப்பட்ட மின்கட்டணம், மக்கள் போராட்டத்திற்குப் பின் மின் கணக்கீட்டில் குளறுபடி என்று திசை திருப்பினர். அதுவும் இன்றுவரை தீர்க்கமுடியவில்லை.
  • சென்னை மாநகராட்சியில், மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசிக்காமல் ஏதேச்சதிகாரத்தோடு உயர்த்தப்பட்ட சொத்துவரி, மக்களின் தொடர் கேள்விக்குப்பின் கைவிடப்பட்டது.
  • அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் என அரசு நிர்வாகத்திற்குள் ஆளுங்கட்சியினரின் தலையீடு.
  • உதவியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் SIGH தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அரசு உயர் பதவி வழங்கி தன்னை நவீன கலிகுலா மன்னர் என நிரூபித்தார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள்.
  • அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சொந்தக் கட்சியினரிடமே லஞ்சம் கேட்பதாக தவெக நிர்வாகிகள் புகார்.
  • கடந்த திராவிட ஆட்சிகளில் அறிமுகப்படுத்தி செயல்படுத்திய திட்டங்களுக்கு வெற்றி என வெட்டியாக பெயர் சூட்டி ஸ்டிக்கர் ஒட்டுதல்.
  • சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் அறைகள் வரை அதிகரித்திருக்கும் ரீல்ஸ் மோகம்.
  • அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்ளாகவே எலிகள் சுற்றித்திரியும் அவல நிலை.
  • அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் குழந்தைகள் முதல், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கும் உணவு வரை வழங்கப்படும் உணவின் தரம் கேள்விக்குறி.
  • பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலம் தனி நபர் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு, அதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலிக்குச் சொந்தமான நிலம் மோசடி பத்திரபதிவு என தினம்தோறும் வரும் நிலமோசடி புகார்கள்.
  • எந்தவகையிலும், துளியளவிலும் . மக்களுக்கும், மாநிலத்திற்கும் பயன்படாத நிதிநிலை அறிக்கை.
  • விவசாயிகளின் உண்மையான வலியைக் உணராமல் தயாரிக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை.
  • கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் தலைமைச் செயலகத்தில் பல கோடி ரூபாய் செலவில் அறையை மாற்றும் முதலமைச்சர்.
  • உண்மையான முதலீடுகளை கொண்டுவருவதிலும் வேலைவாய்ப்பை பெருக்குவதிலும் அக்கறையின்மை.
  • தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடாத நிலையில் இந்த தமிழக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மடைமாற்ற அவசியமற்ற நிறைவேற்றம். தீர்மானம்

இப்படியாக தவெக அரசின் இந்த 100 நாட்களில் நடைபெற்ற குழப்பங்களையும், குளறுபடிகளையும் அடுக்கும் நிலையில், எதேனும் மக்கள் நலனுக்கென ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதாக இதுவரை தெரியவில்லை. நிர்வாகக் குழப்பம், திட்டமிடலின்மை, ரீல்ஸ் மற்றும் விளம்பர மோகம் மட்டுமே இந்த 100 நாட்கள் தவெக ஆட்சியின் அடையாளங்களாக மாறியுள்ளன. முதல் 100 நாட்கள் ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தடுமாற வைத்திருக்கும் தவெக அரசு, இனிவரும் நாட்களிலாவது மக்கள் நலனுக்கான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க முன்வர வேண்டும் என இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்” என்று டிடிவி தினகரன் கடுமையான விமர்சன்ங்களை முன்வைத்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow