வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்...தயார் நிலையில் அதிவிரைவு படை...கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்...

கோவையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Apr 17, 2024 - 22:01
வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்...தயார் நிலையில் அதிவிரைவு படை...கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்...

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், கோவை தொகுதியில் வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி மற்றும் மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 


அப்போது பேசிய தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, வாக்குப்பதிவு மையங்களில் பணி புரியும் அலுவலர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு காலநிலையை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை, ஷாமியானா பந்தல் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். 


முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வரும் போது, அவர்களுக்காக சக்கர  நாற்காலிகளும், ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, பேருந்து மற்றும் ஜீப் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


கோவை - கேரள மாநில எல்லையில் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஒன்பது வாக்குச்சாவடிகளும், துணை ராணுவ படை மற்றும் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் வாக்குப்பதிவு நடைபெறும் என குறிப்பிட்ட அவர், யானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். 


இதனை தொடர்ந்து பேசிய கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், வெளியூர் ஆட்கள் யாரும் மாலை 6 மணிக்கு மேல் எங்கும் தங்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் சோதனை நடத்தப்படும் என்று கூறினார். 

மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள மையங்களில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப சிறப்பு அதிவிரைவு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow