த.வெ.க.வை மிரளவிடும் செ.வெ.க! ‘சின்ன பகவதி' அடையாளத்துடன் வலம்வரும் செங்கோட்டையன்!

தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படுவதால், விஜய்யுடன் ஆரம்பகாலம் முதல் பயணிக்கும் ஒரிஜினல் தவெக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Nov 5, 2026 - 17:19
த.வெ.க.வை மிரளவிடும் செ.வெ.க! ‘சின்ன பகவதி' அடையாளத்துடன் வலம்வரும் செங்கோட்டையன்!

'கட்சிக்குள்ளே இப்படியொரு எரிமலை உருவாகிக்கிட்டு இருக்கிற விவகாரம், தளபதிக்கு தெரியுமான்னு தெரியலை. இந்த மாஜி ஊழல் சக்தி டீமை இப்படியே வளரவிட்டால், சத்தியமா கட்சிக்கு நல்லதல்ல' - நரம்பு புடைக்க... ஆத்திரம் வெடிக்க பேசுகிறார்கள் விஜய்யின் வெறித்தன விசுவாசிகள்!

விஷயம் இதுதான். ஆட்சியைப் பிடித்தபின் வந்து ஒட்டிக்கொள்ளும் அ.தி.மு.க.வினரை, ரசிகர் மன்ற காலத்திலிருந்து விஜய்யோடு பயணிக்கும் த.வெ.க. புள்ளிகளுக்கு அறவே பிடிக்கவில்லை. இதனால் அனைத்து மாவட்டங்களிலுமே இரு தரப்புக்கும் இடையே உரசல் தீ பறக்கிறது. அப்படி கொங்கு மண்டலத்தில், அதிமுகவிலிருந்து வருவோருக்கு பதவிகளை வாங்கிக் கொடுப்பதன் மூலம் தனி பவர் சென்டராக செங்கோட்டையன் உருவாகி வருவதாகவும். அவர் மீது ஒரிஜினல் தவெகவினர் உச்சபட்ச கடுப்பில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இதுபற்றி மூத்த அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். "உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? தவெகவில் இணைந்திருக்கும் மாஜி அதிமுகவினர். செங்கோட்டையனை சின்ன பகவதின்னுதான் கூப்பிடுறாங்க. ஆரம்பத்தில் செங்கோட்டையன் இவங்களை பெருசா வரவேற்கவுமில்லை, பதவி பெற்றுத் தரவும் நினைக்கவுமில்லை சொல்லப்போனால் அவங்கமேல கோபம்தான் காட்டினார். காரணம் தான் அதிகமா கொண்டாடப்படுறது எங்கே தலைமைக்கு  எரிச்சலை உருவாக்கிடுமோன்னு பயந்தார். ஆனால் தாராபுரம் இடைத்தேர்தல் அவரை அடியோடு மாத்திடுச்சு. அங்கே இருந்துதான் தன்னை ஒரு பவர் சென்டராக மாற்றிக்கொள்ள தொடங்கினார்.

அதாவது. தாராபுரம் இடைத்தேர்தலில், அங்கு பொறுப்பு அமைச்சராக இல்லாத  நிலையிலும் செங்கோட்டையனுக்கு முழு அதிகாரத்தை விஜய் கொடுத்தார். இதன் பிறகு செங்கோட்டையன் போட்டுக் கொடுத்த வியூகங்களை இளம் அமைச்சர்கள் பெருசா கண்டுக்கல. அவர் தெற்கே சொன்னால், அவங்க வடக்கே நின்னாங்க.

அதன்பிறகுதான் செங்கோட்டையன். ஸ்கெட்ச் போட்டு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தார். அதாவது தவெகவுக்கு தாவி, பதலியை எதிர்பார்த்து தவித்துக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. மாஜி அமைச்சர்களுக்கு துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளை வாங்கிக் கொடுத்தார். அவர்களை வைத்தே.  தாராபுரத்தில் தேர்தல் பணிகளில் இறங்கி அடித்தார்.

அதன் விளைவாக, கொஞ்சம் அசந்தாலும் தோல்வி எனும் நிலையில் இருந்த தாராபுரத்தில் தவெக அமோக வெற்றிபெற்றது. இதனால் மேற்கு மண்டலத்தில் செங்கோட்டையனின் இமேஜ் கூடியது. இதை விஜய்யின் நீண்டநாள் விசுவாசிகளான ஒரிஜினல் த.வெ.க.வினர் ரசிக்கவில்லை. செங்கோட்டையனுக்கு நெருக்கமாக இருக்கும் தைரியத்தில் மாஜி அதிமுகவினர் தங்கள் மாவட்டங்களில் காட்டும் மாஸும் கெத்தும் அந்தந்த மாவட்டங்களின் தவெக அமைச்சர்களுக்கு கடுப்பேற்றுகிறது.

இதற்கிடையே, அடுத்து இடைத்தேர்தல் நடைபெறும் பெருத்துறை மற்றும் விராலிமலையில் மாஜி அ.தி.மு.க.வினரான ஜெயக்குமாரும், விஜயபாஸ்கரும் தான் மீண்டும் வேட்பாளர்கள் என்று செங்கோட்டையன் ஓபனாக பேசியிருந்தார். விஜய் அறிவிக்கும் முன்னர் செங்கோட்டையனே இப்படி மாஜி அதிமுகவினரை வேட்பாளர்களாக அறிவித்தது. அந்தந்த மாவட்ட ஒரிஜினல் தவெ.கவினரை பதற வைத்துவிட்டது. இவர்களைப் போலவே, பெருந்துறையை உள்ளடக்கிய ஈரோடு மாவட்ட அமைச்சர் விஜய் பாலாஜியும், விராலிமலையை உள்ளடக்கிய புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர் பர்வேஸும் இப்போதே அப்செட் ஆகியிருக்கின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் கோவைக்கு வந்த முதல்வர் விஜய்யை தொடக்கத்தில் இருந்து அவரோடு பயணித்த அம்மாவட்ட த.வெ.க. நிர்வாகிகளால் நெருங்கக்கூட முடியவில்லை. ஆனால், அ.தி.மு.க.விலிருந்து தாவிய திருப்பூர் மாவட்ட சத்தியபாமாக்கள் சந்தித்து பூங்கொத்து கொடுக்கிறார்கள். இதற்கு  காரணம் செங்கோட்டையன்.

அதற்கேற்ப, செங்கோட்டையனால் அதிமுகவில் பதவி பெற்ற மாஜி அமைச்சர்கள் தங்களை செங்கோட்டையன் டீம்' என்று ஓபனாக முத்திரை குத்திக்கொள்வதில் பெருமைப்படுகிறார்கள். இதுவும் ஒரிஜினல் தவெகவினருக்கு பிடிக்கவில்லை. இவர்களில் சிலர் சமீபத்தில் ரகசிய ஆலோசனை நடத்தி, 'இனியும் விடக்கூடாது. மாஜி அதிமுக டீமுக்கு எதிராக இறங்கி அடிப்போம் என முடிவெடுத்துள்ளனர்.

அதன் விளைவுதான், 'கரூர் சம்பவத்தில் கட்சிக்காக சிறை சென்று வந்த மதியழகனுக்குத் தான் கரூர் இடைத்தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும். விராலிமலை, அம்பை உள்ளிட்ட தொகுதிகளிலும் மாஜி அதிமுக எம்.எல்.ஏக்களை தவிர்த்துவிட்டு ஒரிஜினல் தவெகவினருக்குதான் சீட் கொடுக்க வேண்டும் என்று பனையூரை நோக்கி குரல் எழும்பியுள்ளது. 

மேலும், மாஜி அதிமுகவினருக்கு துணை பொதுச்செயலாளர் போன்ற பதவிகளை கொடுக்கலாம் ஆனால் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கக் கூடாது' என்று சில அமைச்சர்களும் புஸ்ஸி ஆனந்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள். அவரும் கூட 'நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான்' என்ற டோனில் பேசியிருக்கிறார். அவரை மேலும் வெறுப்பேற்றும் வகையில் மற்றொரு அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம், 'விட்டா செங்கோட்டையன் வெற்றிக் கழகம்னு தனி அணி ஆரம்பிச்சிடுவாங்கண்ணா' என்றும் புலம்பியிருக்கிறார்.

இன்னொரு பக்கம், அமைச்சர் ஆதவ் அ.தி.மு.க.வினரின் வருகையை ஓவராக ஆதரிக்கிறார். டோட்டலாவே இரட்டை இலை கூடாரத்தைக் காலி செய்துவிடுவது என தீவிரமாக செயல்படுகிறார். ஆக தற்போதைக்கு த.வெ.கவில் ஒரிஜினல் தவெக ஒரு தரப்பாகவும், ஒட்டியவர்கள் எதிர்தரப்பாகவும் நிற்கிறார்கள்." என்று முடித்தனர்.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் இதுபற்றி நாம் பேசத் துவங்கியதும் 'மழை வெள்ளப் பிரச்னைகளை சீர் செய்வதில் பிஸியாக இருக்கிறோம். அரசியல் வேண்டாமே.” என்றார். கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையனிடம் இதுபற்றி கேட்டபோது, கற்பனைக்கும் வதந்திக்கும் எப்படி பதில் தருவது?" என்றபடி நகர்ந்தார்.
'தவெக ஆட்சியைப் பிடிக்கும்' என்பது கூட ஒரு காலத்தில் கற்பனை என்றுதான் விமர்சிக்கப்பட்டது அமைச்சரே!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow