நெல்லையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நடிகர் விஜய்
2 பெண்கள் உள்பட 6 பேர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தனர்.
நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் டென்ஷனான நிலையில், நடிகர் விஜய் கூலாக ரியாக் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ள நீரில் பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தன.
மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து 3 நாட்களாக குடிக்க தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர்.ஹெலிகாப்டர்கள் மூலம் சிலருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. பலர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், தனியார் சமூக நல அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் சென்ற நடிகர் விஜய் பின்னர் அங்கிருந்து நெல்லை பாளையங்கோட்டைக்கு காரில் சென்றார்.
நெல்லையில் உள்ள தனியார் மஹாலில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் போர்வை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
அப்போது நெல்லையில் கனமழையின் போது வீடு முழுவதும் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட பெண் நடிகர் விஜயிடம் தங்களின் நிலை குறித்து விளக்கி கூறினார். அதற்கு விஜய் பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
மேடையில் விஜய் நிவாரண பொருட்களை வழங்கி கொண்டிருந்தார்.அப்போது மூதாட்டி ஒருவர் விஜயின் கன்னத்தை தொட்டு வாழ்த்தினார். மேலும் சிரித்த முகத்துடன் நிவாரண பொருட்களை வாங்கினார். அப்போது நிவாரண பொருட்களின் எடை அதிகமாக இருந்ததால் மூதாட்டி சற்று தடுமாறினார். இதையடுத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மூதாட்டியிடம் இருந்த நிவாரணப் பொருட்களை வாங்கினர். பின்னர் மூதாட்டியை அழைத்து செல்ல முயன்றனர்.
இதனால் டென்ஷனான புஸ்ஸி ஆனந்த், ஏய்...ஏய்...எனக்கூறி கையை ஆக்ரோஷமாக அந்த பக்கம் போ..என அதட்டினார். இச்சம்பவம் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கவனித்த நடிகர் விஜய், நான் இருக்கிறேன். பதற்றம் அடைய வேண்டாம் என்கிற ரீதியில் கையை அசைத்து சைகை காட்டினார். மேலும் புஸ்ஸி ஆனந்தை பார்த்து கூல்..கூல்... என்றார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த சற்று கூலானார்.
முன்னதாக நடிகர் விஜய் நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவர் விஜயின் காலில் விழுந்து ஆசிபெற்று பின்னர் செல்ஃபி எடுத்தார்.இதனால் சற்று கோபமான விஜய் இளம்பெண்ணின் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார். பின்னர் நிவாரண பொருட்கள் வேண்டாமா? என மூன்று முறை கேட்டார்.ஆனால் இளம்பெண்ணோ செல்ஃபி போதும் என்றது. சரி போங்க என்று விஜய் அனுப்பி வைத்தார்.
இந்த கனமழை வெள்ளத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் கொடுக்கப்பட்டது. மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.10 முதல் ரூ.50 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்பட்டது.
நெல்லைக்கு விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் தனியார் மஹாலில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. விஜய் தனியார் மஹாலில் உள்ளே செல்லும் முன்பே கதவை அடைத்ததால் சற்று இடறி விழுவதுபோல் சென்ற விஜயை ரசிகர்கள் தாங்கி பிடித்தனர். இதனால் டென்ஷனான புஸ்ஸி ஆனந்த் அந்த நபரை கடிந்து கொண்டார்.
நிவாரணப் பொருட்களை வழங்கிய விஜய் ரசிகர்களின் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர் வெளியே புறப்பட்ட விஜயுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முண்டியத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தனர். அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. முன்னதாக நடிகர் விஜய் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?