அபோலோவின் ரூ.8,600 கோடி விரிவாக்கத் திட்டம்... சிரஞ்சீவி மருமகளுக்கு முக்கிய பதவி!

அபோலோ மருத்துவமனைகள் குழுமத்தின் அடுத்தகட்ட விரிவாக்கத் திட்டத்தில் சிரஞ்சீவியின் மருமகளும், ராம்சரணின் மனைவியுமான உபாசனா காமினேனி கொனிடேலாவுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Sep 25, 2026 - 13:07
அபோலோவின் ரூ.8,600 கோடி விரிவாக்கத் திட்டம்... சிரஞ்சீவி மருமகளுக்கு முக்கிய பதவி!

அபோலோ மருத்துவமனைகள் குழுமம் நாடு முழுவதும் சுமார் ரூ.8,600 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், அந்தத் திட்டங்களுக்கான இயக்குநராக உபாசனா கொனிடேலா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படவுள்ள அவர், புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கெனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் பொறுப்பை ஏற்கிறார். இதற்காக அபோலோ குழுமத்தின் நிர்வாகக் குழு, மருத்துவர்கள் மற்றும் திட்டப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

மருத்துவமனைகளின் கட்டமைப்பு நோயாளிகளுக்கு எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் வகையில் வடிவமைப்பதில் உபாசனா கவனம் செலுத்த உள்ளார். குறிப்பாக, தெளிவான வழிகாட்டி பலகைகள், மருத்துவமனைக்குள் எளிதாகச் செல்லும் வகையிலான அமைப்பு, மருத்துவப் பணிகளுக்கான திறமையான இடவசதி உள்ளிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

மேலும், திட்டங்கள் தொடங்கும் நிலையில் இருந்து அவை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் வரையிலான பணிகளில் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு முறைகளை வலுப்படுத்தும் பணியிலும் அவர் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.

அபோலோ ஏற்கெனவே ரூ.1,565 கோடி அளவில் புதிய முதலீடுகள் மற்றும் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளின் விரிவாக்கப் பணிகளுக்கான திட்டங்களை அறிவித்துள்ளது. ஹைதராபாத், டெல்லி-என்சிஆர், சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், லக்னோ, வாரணாசி, இந்தூர், கவுகாத்தி, ராஞ்சி போன்ற வளர்ந்து வரும் நகரங்களிலும் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது புதிய பொறுப்பு குறித்து பேசிய உபாசனா கொனிடேலா, இந்திய மக்களுக்கு உலகத் தரமான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற அபோலோ நிறுவனர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து முன்னெடுப்பது இந்தப் பொறுப்பின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் வடிவமைப்பு என்பது கட்டடத்தின் அழகுக்காக மட்டுமல்லாமல், நோயாளிகள் தங்களுக்கு தேவையான இடத்தை எளிதில் கண்டறியவும், அவர்களுடன் வரும் குடும்பத்தினருக்கு வசதியாக இருக்கவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பாக சிகிச்சை அளிக்கவும் உதவும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபோலோவின் மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தில் உபாசனாவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்பு, மருத்துவமனை கட்டமைப்பு மற்றும் நோயாளிகளின் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow