அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ... 3 நாள் காவல்... 'இது சர்வாதிகாரம்'...கெஜ்ரிவால் மனைவி ஆவேசம்!

''கெஜ்ரிவால் 20ம் தேதி ஜாமின் பெறுகிறார். இதற்கு அமலாக்கத்துறை உடனடியாக தடை வாங்குகிறது. அடுத்த நாளே கெஜ்ரிவால் மீது சிபிஐ புதிய வழக்கை போடுகிறது. இன்று அவரை சிபிஐ கைது செய்கிறது. மொத்த அதிகாரமும் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக வேலை செய்கிறது.''

Jun 26, 2024 - 20:09
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ... 3 நாள் காவல்... 'இது சர்வாதிகாரம்'...கெஜ்ரிவால் மனைவி ஆவேசம்!
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ, அவரை 3 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றது. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால், 'மக்களவை தேர்தலில் பிரசாரம் செய்ய தனக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 

இதன்பிறகு மக்களவை தேர்தலுக்காக ஆம் ஆத்மி அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால் ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பினார். இதற்கிடையே தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று டெல்லி ரோஸ் அவென்யூ விசாரணை நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த 21ம் தேதி விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. ''எங்கள் தரப்பு வாதங்களை சரியாக கேட்காமல் டெல்லி ரோஸ் அவென்யூ விசாரணை நீதிமன்றம் அவசரம், அவசரமாக கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியுள்ளது'' என்று அமலாக்கத்துறை வாதிட்டது. 

இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதன்பிறகு டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தடையை விலக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவரச வழக்காக விசாரிக்க கெஜ்ரிவால் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால் இதை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்தது. இதற்கிடைய இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை தொடர்கிறது' என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. 

இதற்கிடையே இந்த வழக்கில் கலால் மோசடி தொடர்பாக சிபிஐ கடந்த 2 நாட்களாக திகார் சிறைக்கு சென்று  அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.

இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த ஜாமினுக்கான தடையை விலக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த கெஜ்ரிவால் அந்த மனுவை வாபஸ் பெற்றார். பின்பு சிபிஐ அதிகாரிகள் இன்று மாலை கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

கெஜ்ரிவாலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் அனுமதி கோரினார்கள். ஆனால் இதை மறுத்த நீதிமன்றம், கெஜ்ரிவாலை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியது.

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் சிறையில் இருந்து வெளியேறக் கூடாது என்பதற்காக பாஜக அரசு வேண்டுமென்றே அவரை அடுத்தடுத்து கைது செய்வதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் பாஜக அரசை குற்றம்சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ''கெஜ்ரிவால் 20ம் தேதி ஜாமின் பெறுகிறார். இதற்கு அமலாக்கத்துறை உடனடியாக தடை வாங்குகிறது. அடுத்த நாளே கெஜ்ரிவால் மீது சிபிஐ  புதிய வழக்கை போடுகிறது. இன்று அவரை சிபிஐ கைது செய்கிறது. 

மொத்த அதிகாரமும் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக வேலை செய்கிறது. இது சட்டத்தின்படி நடப்பது அல்ல. இது சர்வாதிகாரம்; இது எமர்ஜென்சி'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow