ஒரு ரூபாய் கூட அட்வான்ஸ் வாங்காத சிவாஜி....‘உயர்ந்த மனிதன்’ உருவான சுவாரஸ்ய கதை!
சிவாஜி கணேசன்–ஏவிஎம் இடையேயான மனக்கசப்பு முடிவுக்கு வந்து உருவான ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் சுவாரஸ்ய பின்னணியும், திரைக்குப் பின்னால் நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்களை இப்பதிவு விளக்குகிறது.
கொஞ்சம் பேச்சு... கொஞ்சம் சினிமா! - வி.ராம்ஜி
மனதில் ஒருவர் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்போம். ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாதபடி, ஏதேனும் ஒரு சின்ன சம்பவம் அலைக்கழித்துப் பிரித்துப்போட்டுவிடும். ‘எந்த சண்டையோ சச்சரவோ இல்ல. ஆனாலும் பேசுறதே இல்ல...’ என்று சொல்லாதவர்களே இல்லை. அதுவும் நம் வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி, அந்தஸ்துகளையெல்லாம் கடந்து ஒருவித இறுக்கமும் தயக்கமும், சண்டையே இல்லாமல் பிரித்துவைக்கும்; யுத்தமே நடக்காமல் நம் மனதை வதைத்துப் போடும்! ஏவிஎம் தயாரிப்பில் சிவாஜி கணேசன், செளகார் ஜானகி, அசோகன், வாணிஸ்ரீ, சிவகுமார், பாரதியின் நடிப்பில் வெளியான ‘உயர்ந்த மனிதன்’ படத்தைச் சொல்லியாக வேண்டும். படத்துக்குப் பின்னே நிகழ்ந்த சுவாரஸ்யங்கள்தான் பலரையும் ‘உயர்ந்த மனிதன்’ என்று நெகிழ்ச்சியுற வைக்கிறது.
சினிமா என்பது கூட்டு முயற்சி. இங்கே சினிமா மட்டுமா? தனித்து இயங்குதல் என்பது இங்கே சாத்தியமே இல்லை. ஒன்றன்பின் ஒன்றாக, ஒருவரையடுத்து ஒருவராக இருப்பதே கூட்டுத்தன்மைக்கான ஆணிவேர்! சினிமாவில், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குள் எழும் சின்னதான மனஸ்தாபங்கள், ஈகோக்கள், மோதல்கள் இயல்பானவை. அப்படி சிலருக்கு ஏற்பட்ட மன வலிகளுக்கு மருந்துப் போட்ட படமாக அமைந்ததுதான் ‘உயர்ந்த மனிதன்’!
முதலில் ‘உயர்ந்த மனிதன்’ கதையைப் பார்த்துவிடலாம்.
வங்க மொழியில் வெளியான, ‘உத்தர் புருஷ்’ என்ற படம் நன்றாக ஓடுவதாக, ஏவி.எம் நிறுவனத்தின் கொல்கத்தா பங்குதாரர் விஏபி ஐயர் தகவல் தெரிவித்தார். அடுத்து அந்தப் படத்தை சென்னையில் பார்த்தார்கள். ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டது. உரிமையை உடனே வாங்கி, ஒப்பந்தமும் போடப்பட்டது. தமிழுக்காக சில மாற்றங்களைச் செய்து, திரைக்கதையை உருவாக்கச் சொன்னார் மெய்யப்ப செட்டியார். உடனே பிரபல திரையுலக ஜாம்பவான்களில் ஒருவரான ஜாவர் சீதாராமன் அந்தப் பணிகளில் இறங்கினார்.
ஜாவர் சீதாராமன் என்று சொன்னால் நிறைய பேருக்குத் தெரியுமா, தெரியாதா என்று எனக்குச் சொல்லத்தெரியவில்லை. வீணை பாலசந்தரின் இயக்கத்தில், சிவாஜி நடித்த ‘அந்தநாள்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் பூதமாகவும் நடித்தவர்தான் ஜாவர் சீதாராமன்.
கதைக்கு வருவோம்.
மிகப்பெரிய கோடீஸ்வரன் மகனான ராஜு, தன் நண்பர்கள் டாக்டர் கோபால் மற்றும் சுந்தரத்துடன் கொடைக்கானலில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு அடிக்கடி செல்வார். அங்கு வேலைபார்ப்பவரின் மகள் பார்வதியைப் பார்க்கிற ராஜு, முதல் சந்திப்பிலேயே மனதைப் பறிகொடுக்கிறார். பார்வதியும்தான்! ஒருகட்டத்தில், அப்பா சம்மதிக்கவே மாட்டார் என்பதை நன்றாக உணர்ந்த ராஜூ, அப்பாவுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ்கிறார். சந்தோஷத்தின் சாட்சியாக பார்வதி கர்ப்பமாகிறாள்.
இதெல்லாம் அப்பாவுக்குத் தெரியாமல் இருக்குமா? கிளம்பி வருகிறார். காச்மூச் என கத்துகிறார். உச்சக்கட்டமாக, பார்வதியின் குடிசைக்குத் தீ வைக்கிறார். காப்பாற்றப் போராடுகிற ராஜுவை தடுத்து நிறுத்துகிறார்கள். உடைந்து, நொறுங்கி, வாழப்பிடிக்காமல் வாழும் ராஜூவை, மிரட்டி, உருட்டி, அதட்டி பணியவைத்து, விமலாவை திருமணம் செய்துவிட்டு, செத்துப்போகிறார் அப்பா! ஒருவித குற்ற உணர்வுடன் காலந்தள்ளுகிறார் ராஜூ. இந்த வேதனைகள் மொத்தத்தையும் அறிந்த ஒரே நண்பன், டாக்டர் கோபால். அவர்தான் ராஜூவுக்கு ஆறுதல். சில சமயங்களில் ராஜூவின் மனசாட்சியாக சகலத்தையும் சுட்டிக்காட்டுவார்!
இருபது வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், அவர்கள் வீட்டுக்கு வேலைக்காரனாக வருகிறான் அந்த இளைஞன். பொய்யே பேசமாட்டேன் என்ற உறுதியுடன் இருக்கும் அவனுடைய பெயர் சத்யமூர்த்தி. அவனின் நேர்மையும் அப்பாவித்தனமும் ராஜுவுக்கு ரொம்பவே பிடித்துப் போகிறது. அந்தப் பையனிடம் அன்பும் கரிசனமுமாக இருக்கும் கணவரின் செயல், விமலாவுக்கு எரிச்சலூட்டுகிறது. ராஜூவின் முதல் மனைவி கர்ப்பமாக இருந்தது என்று சொன்னதை மறக்கவில்லைதானே! ஆக, ராஜூ, பார்வதி ஜோடியின் மகன்தான், இந்த சத்தியமூர்த்தி எனும் வேலைக்காரன் என்பது நான் சொல்லாமலே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நாம்தான் இப்படி எத்தனை சினிமாக்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறோம்?!
சத்தியமூர்த்திதான் தன் மகன் என்பதை ராஜூ தெரிந்துகொண்டாரா? அதை இரண்டாவது மனைவி விமலா ஏற்றுக்கொண்டாரா என்பதுதான் மிச்சசொச்சக் கதை!
ராஜுவாக சிவாஜி கணேசன், கோபாலாக அசோகன், சுந்தரமாக மேஜர் சுந்தர்ராஜன்,பார்வதியாக வாணிஸ்ரீ, விமலாவாக செளகார் ஜானகி, சத்தியமூர்த்தியாக சிவகுமார் மற்றும் பாரதி, மனோரமா, ஜி.சகுந்தலா, வி.கே.ராமசாமி, நாகையா, ராமதாஸ், வி.எஸ்.ராகவன் என்று பலரும் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதிஇருந்தார். ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே’, ‘நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா’, ‘என் கேள்விக்கென்ன பதில்’, ‘வெள்ளிக்கிண்ணம்தான்...’, ‘அத்தானின் முத்தங்கள்’ என அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.
‘என் கேள்விக்கென்ன பதில்’ பாடலில் சிவகுமாரும் பாரதியும் நடித்தனர். முதலில் பாடல் காட்சியை ஷுட் செய்துவிட்டார்கள். போட்டுப் பார்த்த ஏவி.எம்.செட்டியார், “கதைப்படி சிவகுமார் ஏழை, நாயகி டிரைவரின் மகள். இருவரும் மாடர்ன் டிரெஸ்சில் வெஸ்டர்ன் மியூஸிக் பாடலில் ஆடுகிறார்களே... இது ரசிகர்களுக்கு உறுத்துமே... கதைக்கும் பொருந்தாதே...’ என்று சொல்லி ‘ரிஜெக்ட்’ செய்துவிட்டார். பிறகு இப்போது படத்தில் வருகிற பாடல் காட்சி உருவாக்கப்பட்டது. டியூனை மட்டும் வைத்துக்கொண்டு,புல்லாங்குழல், சித்தார் போன்ற வாத்தியங்களை வைத்து பாடலை மாற்றி ஒலிப்பதிவு செய்துகொடுத்தார் எம்.எஸ்.வி. இதற்குப் பிறகு பாடல் காட்சியில் மாடர்ன் டிரெஸ் இல்லாமல் சிவகுமாரும் பாரதியும் தொட்டுக் கொள்ளாமல் பாடுவது போல ரீஷூட் செய்தார்கள். ஆக, அந்தக்காலத்தில் எப்படியெல்லாம் கவனமாகவும் ஈடுபாட்டுடனும் இருந்தார்கள், பாருங்கள்!
‘அந்த நாள் நாபகம் நெஞ்சிலே வந்ததே’ பாடலை, ‘மை ஃபேர் லேடி’ என்ற ஆங்கிலப் படத்தின் பாதிப்பில், பாடலுக்கு இடையே வசனம் வருவதுபோல உருவாக்கி இருந்தார்கள். ‘நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா’ பாடல் காட்சியை கொடைக்கானலில் படமாக்கத் திட்டமிட்டார்கள். அப்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால், அங்கு படமாக்க முடியாத நிலை. இதனால் கொடைக்கானல் போலவே தத்ரூபமாக செட் போட்டு அப்பாடல் காட்சியை படமாக்கியதாக ஏவி எம் சரவணன் தெரிவித்தார். இந்தப் பாடலின் இன்னொரு மகுடம்... பாடிய சுசீலாம்மாவுக்கு தேசிய விருது கிடைத்தது.
நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் முதல் படம் ‘பராசக்தி’ என்பதும் ஏவி மெய்யப்பச்செட்டியாரும் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்தார்கள். இதையடுத்து ஏவி எம் நிறுவனத்தில் பல இடங்களில் நடித்தார் சிவாஜி. ஆனால் திடீரென ஏவிஎம்மிற்கும் சிவாஜிக்கு சின்னதான மனக்கசப்பு; லேசான கருத்துவேறுபாடு! ‘பெருசா விஷயம் ஒன்னுமில்ல, சண்டையும் இல்ல, பூசலுமில்ல’ என்கிற ரீதியிலான விஷயம் இது.
சிவாஜியும் இயக்குநர் ஏபி நாகராஜனும் ஏவி எம் ஸ்டூடியோவில் உள்ள தியேட்டருக்கு வந்து, எடுத்தது வரை உள்ள படத்தைப் போட்டுப்பார்க்க வந்தார்கள். இது வேறொரு படம். ஆனால் திடீரென மெய்யப்பச் செட்டியார், தங்கள் தயாரிப்புப் படத்தைப் போட்டுக்காட்டச் சொல்ல, அதன்படி தியேட்டருக்குள் படம் பார்த்துக்கொண்டிருந்தார் செட்டியார். வெளியே சிவாஜி; உள்ளே சிவாஜி! ‘இப்போது டைம் வாங்கிய சிவாஜியும் ஏபி நாகராஜனும். இரண்டுபேரும் வெளியே நிற்கிறார்கள்’ என்பதை செட்டியாரிடம் சொல்லவில்லை. ஆனால், சிவாஜிக்கு ‘நாம் நிற்கிறோம் என்பதைச் சொல்லியும் செட்டியார் பாட்டுக்கு படம் பார்த்துக்கொண்டிருக்கிறாரே...’ என்று வருத்தம்! பலமணி நேரக்காத்திருப்புக்குப் பிறகு சிவாஜி விருட்டெனக் கிளம்பிச் சென்றார். பிறகுதான் இதெல்லாம் செட்டியாருக்கு தெரிவிக்கப்பட்டது.
ஏ சி திருலோகசந்தரும் ஏவி எம் சரவணனும் நல்ல நண்பர்கள். ஒன்றாகப் படித்தவர்கள். தவிர, ஏவி எம்மின் ஆஸ்தான இயக்குநர்களில் இவரும் ஒருவர். சிவாஜியை வைத்து நிறைய படங்களை இயக்கியவர் இவர். ஏ சி திருலோகசந்தரைப் பார்க்க ஏவி எம் சரவணன் வந்தார். அங்கே சிவாஜி நடித்துக்கொண்டிருந்தார். வணக்கம் சொன்னார் சரவணன். ‘உக்காருப்பா’ என்றார் சிவாஜி. சிறிய மெளன இடைவெளிக்குப் பிறகு, ஒரு குழந்தையைப் போல, அப்போது தியேட்டர் வாசலில் காத்திருந்த விஷயத்தைச் சொல்லி கொட்டித்தீர்த்துவிட்டார்.
‘ஆனா, அப்பச்சி இல்லேன்னா இந்த வாழ்க்கை எனக்கேது? நான் ரொம்ப வீறாப்பு காட்டிருக்கேன் பாரு’ என்று சொல்லி மன்னிப்புக் கேட்டார் சிவாஜி. அப்பச்சியின் மனநிலையை ஏவி எம் சரவணனும் சொல்ல, அந்த விநாடி, தேவையே இல்லாமல் உருவான பிணக்கு, ஈகோ, உரசல், மோதல், விலகல் என அனைத்தும் சுக்குநூறாக நொறுங்கியது.
‘ஏன் சரவணா, அப்பச்சி கிட்ட கேளு. என்னை வைச்சு படம் எடுக்க விருப்பமிருந்தா, நான் நடிக்கிறதுக்கு ரெடியா இருக்கேன்’ என்று சொல்ல, அப்போது உரிமம் வாங்கிய கதை, உயிர் பெற்றது. அதுதான் ‘உயர்ந்த மனிதன்!’ இங்கே... உயர்ந்த மனிதர்களாக சிவாஜியும் ஏவி மெய்யப்பச் செட்டியாரும் திகழ்ந்தார்கள்.
இவர்கள் மட்டும்தான் உயர்ந்த மனிதர்களா?
சிவாஜிக்கும் அசோகனுக்கும் அப்போது ஏனோ சண்டை. இருவரும் பேசிக்கொள்ளமாட்டார்கள். முகம்பார்க்க மாட்டார்கள். சேர்ந்து நடிப்பதையே புறக்கணித்து வந்தார்கள். ஆனால், ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் இந்தி வெர்ஷன் சிவாஜிக்குப் போட்டுக்காட்டப்பட்டது. ‘அந்த டாக்டர் கேரக்டர் நல்லாருக்கே. நான் நடிக்கிறேனே...’ என்றார் சிவாஜி. ‘அப்புறம் ஹீரோவா யார் நடிக்கிறது கணேசா?’ என்றார் மெய்யப்ப செட்டியார்.
‘ஆமாம் அந்த டாக்டரா யாரு நடிக்கிறது’என்று சரவணனிடம் சிவாஜி கேட்டார். அவர் ‘அசோகன்’ என்று பதில் சொன்னார். முகம் இறுகிவிட்டது நடிகர்திலகத்துக்கு. ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை. இங்கேயொரு விஷயம்... அசோகனும் ஏவி எம் சரவணனும் ‘வாடா போடா’ தோஸ்த்துகள். ஏவி எம் படத்தில் ஒரு காட்சியிலாவது அசோகன் இருப்பார். இதைக் கடந்துதான் அந்த ‘டாக்டர் கோபால்’ கேரக்டரில் அசோகன் நடித்தார்.
ஷூட்டிங் தொடங்கியதும் இருவரும் எந்த இடத்திலும் அதை வெளிக் காட்டவில்லை. அதை மறந்து நண்பர்களாகவே பழகினார்கள். அசோகன் நீண்ட வசனம் பேசும் காட்சி ஒன்று... ‘ரீடேக்’ வாங்கிக் கொண்டே இருந்தார் அசோகன். பிறகு, நெஞ்சுவலியால் துடித்து இறப்பதுபோல படத்தில் ஒரு காட்சி வரும். ஒருகட்டத்தில், ‘ரீடேக்’ டென்ஷனைப் பார்த்த சிவாஜி, அந்தக் காட்சிக்கு நடித்துக் காட்டினார். அதேபோல் அசோகன் நடித்தார். அரங்கில் இருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினார்கள். ஓடிவந்து சிவாஜியை ஆரத்தழுவிக்கொண்டார் அசோகன்! இங்கே உயர்ந்த மனிதர்களாகத்தான் இரண்டுபேருமே தெரிகிறார்கள்.
எல்லாவற்றையும் விட சுவாரஸ்யம்... ‘ஏம்பா... இந்தப் படத்தை நம்ம திருலோக்தானே டைரக்ட் பண்றான்’ என்று சிவாஜி கேட்டார். ‘கிருஷ்ணன் பஞ்சு’ என்று பதில் வந்ததும் ‘ஷாக்’கானார் சிவாஜி. ‘இதில் கிருஷ்ணன் ரொம்ப நல்ல டைப், பஞ்சுதான் கொஞ்சம் முசுடு’ என்பது சிவாஜியின் நினைப்பு. ஆனால் இதற்கும் சம்மதித்தார். சிவாஜியின் நடிப்பைப் பார்த்துவிட்டு, இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இருவருமே ‘கணேசா... நீ நடிப்புக்குன்னே பொறந்தவன்யா’ என்று கொண்டாடினார்கள். இவர்களும் உயர்ந்த மனிதர்கள்தான்!
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை, ஒரு பங்களாவில் தீ பிடித்து எரிவதுபோலவும் உள்ளே சிவகுமாரும் சிவாஜியும் இருப்பது போலவும் படமாக்கி இருந்தனர். தீ, நிஜமாகவே கொளுந்துவிட்டு எரிய, நான்கு கேமராக்களை வைத்து படமாக்கினர். நெருப்பு தொடர்ந்து எரிந்ததால் சுவாசிக்க முடியாமல் மயங்கி கீழே விழுந்ததாக சிவகுமார் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமா? சிவகுமாரின் முதல் படம் ‘காக்கும் கரங்கள்’. ஏவி எம்மின் படம். இந்தப் படத்தில் முக்கியமான காட்சியில் சிவகுமார் பிரமாதமாக நடித்திருந்தார்.
ஆனாலும் ‘காக்கும் கரங்கள்’ படத்தின் நீளம் கருதி, காட்சி வெட்டப்பட்டது. ’உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்த போது, தன் வருத்தத்தை சிவகுமார் சொல்ல, ‘இந்தப் படத்துல நிறைய நல்ல காட்சி இருக்கு. சிவாஜியோட சேர்ந்து நடிக்கிற காட்சியெல்லாம் இருக்கு’ என்று சொல்லி, உற்சாகப்படுத்தி, பாடலும் தந்திருந்தது ஏவி எம். இங்கேயும் உயர்ந்த மனிதர்கள் பட்டியல் நீள்கிறது. சிவாஜியின் இந்தக் கேரக்டர் குறித்து ஆய்வு செய்தே வைத்திருக்கிறேன். காட்சிக்குக் காட்சி, முகபாவனைகள், ஸ்டைல், அயர்ச்சி, குற்றவுணர்ச்சி என எக்ஸ்பிரஷன்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் தந்துகொண்டே இருப்பார். அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் சொன்னால்தான், படம் பார்த்த புண்ணியம் எனக்குக் கிடைக்கும்!
நடிகர்திலகத்தின் முதல் படம் ‘பராசக்தி’. ஏவி எம்மின் ‘உயர்ந்த மனிதன்’ சிவாஜிக்கு 125வது படம். 1968ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம். ஜாவர் சீதாராமனின் வசனங்கள் பெரிய பலம். படத்தின் திரைக்கதை, இன்றைய இயக்குநர்களுக்கான ‘சிலபஸ்!’
இந்தப் படத்துக்கு சம்பளமாக ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் முடிவு செய்யப்பட்டு, அட்வான்ஸ் தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏவி எம் முடிவு செய்தது. ஆனால் சிவாஜி சொன்ன ஒருவார்த்தை...’அட்வான்ஸ்னு ஒருரூபா கூட வேணாம். படம் முடிச்சிட்டு வாங்கிக்கிறேன்’ என்றார்.
ஆமாம்... அட்வான்ஸாக சிவாஜி ஒருரூபாய் கூட வாங்கிக்கொள்ளவில்லை!
What's Your Reaction?