ஜென் ஸீ vs மூத்த தலைமுறை....உறவுச் சிக்கல்களின் பின்னணி!

ஆபீஸில் ஜென்ஸீ தலைமுறைக்கும் மூத்த தலைமுறைக்கும் ஏன் முட்டல் வருகிறது, தொழில்நுட்பம் எப்படி அவர்களின் சிந்தனை முறையை மாற்றியுள்ளது என்பதை அலசும் அடுத்த அத்தியாயம் இப்பதிவு விளக்குகிறது.

Sep 24, 2026 - 17:00
ஜென் ஸீ vs மூத்த தலைமுறை....உறவுச் சிக்கல்களின் பின்னணி!
ஜென்ஸீ தலைமுறைக்கும் மூத்த தலைமுறைக்கும் இடையே முட்டல் ஏற்படும் முதல் இடம் ஆபீஸ்.  அனுபவம் வாய்ந்த மூத்தவர்களும் திறமைசாலிகள் தான் என்பதை ஜென்ஸீக்கள் ஏற்க  மறுக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் தாங்கள் பார்க்கும் ரீல்ஸை நம்பும் அளவுக்கு கூட அவர்கள் மூத்தவர்களை நம்புவதில்லை. விஷுவலாக பார்க்கும் சம்பவங்கள்தான் அவர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அலுவலகத்தில் தங்கள் சீனியர்கள் எதையும் விஷுவல் ஆதாரங்களுடன் காட்டினால் மட்டுமே அவர்கள் நம்புவதாக சொல்கிறார் மென்பொருள் நிறுவனத்தின் ஒரு மூத்த நிர்வாகி.  

வேலைக்கு அடுத்த விஷயமாக,  மூத்த தலைமுறையினர் தங்களுடன் யதார்த்தமாக பழக வேண்டும் என்று ஜென்ஸீ தலைமுறையினர் எதிர்பார்க்கிறார்கள். ‘பூமர்களுக்கு (மூத்தவர்களைத்தான்) அனுபவம் நிறைய இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு எதிர்காலம் குறைவு என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.  
ஜென்ஸீக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு கடந்த கால அனுபவம் மிகவும் குறைவு.  மேலும் அவர்கள் குறுகிய கால பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள் என்கிறார் உலகப் புகழ்பெற்ற இந்திய மென்பொருள் நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக சீனியர் கன்சல்டண்டாக பணிபுரியும் ஒரு மூத்த அதிகாரி.

ஒரு இளம் ஜென்ஸீ  சாஃப்ட் வேர் இஞ்சினியர் தங்கள் தலைமுறையின் தனித்துவம் பற்றி சாட் ஜிபிடி உதவியின்றி  தீர்க்கமாக சொல்வதை கவனிப்போம்.“அறிவியல் தொழில்நுட்பம் குறுகிய இடைவெளியில் நாளுக்கு நாள் முன்னேறி  உலகை புரட்டிப் போட்டுக் கொண்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாங்கள் வளர்ந்தோம். பாரம்பரியமான வழக்கங்களைப் பற்றி எங்களுக்கு ஏதும் தெரியாது. அதே சமயம், இன்றைக்கு உள்ள அதி நவீன உலகம்  எங்கள் குழந்தைப் பருவத்தில் உருவாகவில்லை. இடைப்பட்ட சில ஆண்டுகளில்தான் உருவானது.

நாங்கள் பாரம்பரியத்தை மதிக்கும்  பாட்டி - தாத்தா, தாய் - தந்தை இவர்கள் மத்தியிலும் வாழ்ந்தோம். அதே சமயம்  அபார தொழில் நுட்ப வளர்ச்சிகள் நிறைந்த இண்டர் நெட், சோஷியல்  மீடியா என்ற புது வஸ்துக்களுடனும் தாயாய் பிள்ளையாய் வளர்ந்தோம்.  அவை  எங்களுடன் செம்புலப் பெயல் நீராக (  செம்மண்ணில் பெய்த மழை நீர் அம்மண்ணின் நிறம் மாறுவது போல) கலந்து விட்டன .

ஒரு தீபாவளிக்கு பார்த்த தொழில்நுட்பம்.  அடுத்து வரும் பொங்கலுக்குள் அவுட் டேட் ஆகி விடும். இதனால் உலக சந்தைகளில் இறங்கும் புதுப் புது வெர்ஷன் (அவதாரம் போல) தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்ளும் திறமை பூமர்களை விட எங்களுக்கு அதிகமாகவும் அவசியமாகவும் இருந்தது .

எங்களின் மற்றொரு கூடுதல் திறமை, புதிய தொழில்நுட்ப  விஷயங்களைத் தெரிந்து கொள்ள துபாய் அல்லது அமெரிக்காவில் இருந்து அங்கிள்கள் யாரும் வர வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் கூகுளில் வலை வீசுவோம். அதிகம் பேர் பார்த்த வீடியோ அந்த வலையில் சிக்கும் ... அதைப் பார்ப்போம் . பிறகு மேலும் ஆழமாகத் தேடி அது பற்றி படிப்போம்” இப்படியாக ஜென் ஸீக்களைப் பற்றி அவர் மேலும் சொல்வதை அடுத்த அத்தியாத்தில் தொடர்வோம்.
மித்ரன்-2

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow