விஜய் எங்களுக்காக வந்தாரு..தவெகவில் இணைந்த ஸ்னோலின் தாயார் உருக்கம்

எங்களுக்காக வந்து நின்ற விஜய்க்காக தாங்கள் தவெகவில் இணைந்துள்ளதாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினினின் தாயார் தெரிவித்துள்ளார்.

Nov 11, 2024 - 16:07
விஜய் எங்களுக்காக வந்தாரு..தவெகவில் இணைந்த ஸ்னோலின் தாயார் உருக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தனது மகள் ஸ்னோலின் உயிரிழந்த போது, விஜய் தங்களுக்குக்காக வந்து நின்றார்.எனவே தவெகவில் இணைகிறேன் என  ஸ்னோலின் தாயார் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்தை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அதைத்தொடர்ந்து கட்சியின் கொடி அறிமுகம் செய்து வைத்து பனையூரில் உள்ள அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.இதனைத்தொடர்ந்து அரசியல் பணிகளில் விஜய் தீவிரம் காட்ட ஆரம்பித்தார்.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தவெகவின் மாநில மாநாடு அக்.27ம் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை, கொள்கை தலைவர்கள் யார் என விஜய் விளக்கினார். மேலும் தமது அரசியல் எதிரிகள் யார், மேலும் 2026 சட்டமன்ற தேர்தல், கூட்டணி ஆட்சியில் பங்கு, திமுக எதிர்ப்பு என பல்வேறு விஷயங்கள் விஜய் பேசியிருந்தார். தவெக தலைவர் விஜய்யின் பேச்சு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து விஜய் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பனையூரில் தவெகவின் செயற்குழுக்கூட்டத்தை கூட்டி சில தீர்மானங்களை நிறைவேற்றினார்.

இதையடுத்து,  தவெகவில் புதிய கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை நிர்வாகிகள் தீவிரப்படுத்தியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.இந்த நிலையில்,  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம்பெண் ஸ்னோலின் தாயார் உள்ளிட்ட  300க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

தவெகவில் இளைஞர், இளம்பெண்கள் இணைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்த இளம்பெண் ஸ்னோலின் தாயார் வனிதா தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.இதைத்தொடர்ந்து  இளைஞர்கள் இளம் பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் சால்வை அணிவித்து வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டார். 

இந்த நிலையில் தனக்கும், தனது மகள் ஸ்னோலினுக்கும் விஜய்யை அவ்வளவு பிடிக்கும் என்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் மறைந்த போது விஜய் வந்து ஆறுதல் கூறினார்.அதனால் தவெகவில் இணைந்துள்ளதாக செய்தி ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருக்கிறார்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளம்பெண் ஸ்னோலின் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அப்போது நள்ளிரவில் உயிரிழந்த ஸ்னோலின் வீட்டிற்கு தனது ரசிகர் மன்ற நிர்வாகியுடன் பைக்கில் சென்று விஜய் ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow