ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் இலங்கை செல்ல பாஸ்போர்ட்... நாளை நேர்காணல்...

ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெற அழைத்துச் செல்லப்பட உள்ளனர் - தமிழ்நாடு அரசு

Mar 12, 2024 - 16:22
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் இலங்கை செல்ல பாஸ்போர்ட்... நாளை நேர்காணல்...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திற்கு நாளை அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு  தெரிவித்துள்ளது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கடந்த 2022-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் சாந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி உயிரிழந்தார். 
இந்த நிலையில், முருகன் இலங்கை செல்ல பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் கலந்துகொள்ள மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நேர்காணலுக்காக முன்கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று(மார்ச் 12)  நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை(மார்ச்13)  அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரையும் பாஸ்போர்ட் பெற சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு  அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow