பாலுக்கும் காவல்..பூனைக்கும் தோழன்..விஜய்யின் இரட்டை அரசியல் ஆட்டம்... காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?
காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடரும் அதே நேரத்தில், பிரதமர் மோடியுடனும் இணக்கமான உறவைப் பேணுவதாகக் கூறப்படும் விஜய்யின் அரசியல் நகர்வுகளால், தவெக–காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுமா, காங்கிரஸ் மீண்டும் திமுக பக்கம் திரும்புமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
ஒருபக்கம் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள, காங்கிரஸை கூட்டணி வட்டத்தில் வைத்திருக்கும் த.வெ.க., இன்னொரு பக்கம் அதே ஆட்சியை சிக்கலின்றி தொடர, பா.ஜ.க.வுடன் நட்பு பாராட்டி வருவதாக வரும் தகவல்கள் தான் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டும் பனையூர் பக்கா அரசியல்!
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், 'தவெ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பா.ஜ.க.வை தனது கொள்கை எதிரி என விமர்சித்தார் விஜய். பா.ஜ.க.வுடன் தி.மு.க. ரகசியக் கூட்டணி வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.கவுக்கு எதிரான நிலைப்பாடுகளில் தவெக மென்மையான போக்கையே கடைபிடிப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
காரணம் இதுதான்... ஆட்சி அமைக்க கவர்னர் உதவியை நாடுவதற்கு முன்பு, விஜய் தனக்கு நெருக்கமான பா.ஜ.க சோர்ஸ்கள் சிலரை போனில் தொடர்புகொண்டு அரசியல் நிலவரம் குறித்து பேசினார் என்று கூறப்பட்டது. அப்போது தான் மத்திய அரசின் அதிகாரம் என்ன என்பதை புரிந்துகொண்டிருக்கிறார் விஜய் அதற்கு பிறகு பாஜகவுக்கு எதிராக பேசுவதை மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டது த.வெ.க. கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை வந்த அமித்ஷாவை, தனது வீட்டில் சமைத்த உணவுடன் நேரில் சந்தித்து வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்டார் விஜய். ஆனால், அதே ஆகஸ்ட்டில் சென்னை வந்த ராகுலை சந்திப்பதை தவிர்த்தார் விஜய்!
சென்னை, மகாபலிபுரத்தில் நடந்த காங்கிரஸின் பயிற்சி முகாமுக்கு வந்த ராகுல், முதல்வர் விஜய்யை சந்திக்க விரும்பினார். ஆனால் த.வெ.க. முகாம் அதை தவிர்த்துவிட்டது. ராகுலுடன் நெருக்கம் காட்டுவது பா.ஜ.க. மேலிடத்தை உஷ்ணப்படுத்தும் என்பதை த.வெ.க. தரப்பு நன்றாகவே உணர்ந்திருந்தது.
அதேபோல, இவரின் கம்பாளின் இணைவதையும் விஜய் பெரிதாக விரும்பவில்லை. காங்கிரஸோ தவெ.கவை விடவில்லை. தொடர்ந்து நெருக்கடி கொடுத்து அக்கட்சியை இண்டியா கூட்டணிக்குள் இழுத்துப்போட்டது. இதைத் தொடர்ந்தே, அக்டோபர் 4ம் தேதி சென்னையில் நடந்த இண்டியா கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் தவெக சார்பில் பங்கேற்றார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
இதற்கு பிறகு மீண்டும் விஜய்யை நேரில் சந்திக்க ஆசைப்பட்டார் ராகுல். வரும் அக்டோபர் 10 அன்று சென்னையில் நடைபெறும் 'மாணவர்கள் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்க வரவிருக்கும் ராகுல், அப்போது விஜய்யை சந்திக்க மீண்டும் தூதுவிட்டார். ஆனால், அன்றைய தினம் அமைச்சர்கள் சிலர் துறைவாரியாக மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இன்னொரு நாளில் ராகுலை சந்திப்பதாகவும் சொல்லி நழுவியிருக்கிறது விஜய் முகாம்.
ஆனால், நிஜம் வேறு. அக்டோபர் 11ம் தேதி போரூர் பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை துவக்கிவைக்க சென்னை வரும் பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதல்வர். இருவரும் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க, அக்டோபர் 10ம் தேதி ராகுல். மறுநாள் அக்டோபர் 11ம் தேதி மோடி என மாறி மாறி தேசியக் கட்சிகளை சேர்ந்தவர்களுடன் பயணிப்பது தனது அரசியல் நம்பகத்தன்மையை பாதிக்கும் என நினைக்கிறார் விஜய்.
இவையெல்லாம் ஒரு பக்கமிருக்க, காங்கிரஸின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் சோனியாவும் ப.சிதம்பரமும் இன்னமும் தி.மு.க.வின் தயவை நாட தயாராகத்தான் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கூட கனிமொழியை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய சோனியா, 'எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத் தேர்தல் வரலாம். அப்படியொரு நிலை வரும்போது தமிழகத்தில் கூட்டணி மாற்றம் அவசியம் வரும்' என்று சொன்னதாக தகவல்கள் கசிகின்றன. இதைவைத்து பார்க்கும்போது தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவும், அதற்கு என்ன விலை கொடுக்கவும் காங்கிரஸ் தயாராகிவிட்டது என்றே தெரிகிறது.
தி.மு.கவுடன் காங்கிரஸ் ஒன்றாக பயணித்த காலம் வரை, பிற மாநிலங்களில் நடக்கும் தேர்தலின்போது காங்கிரஸுக்கு தேவையான நிதியை வாரி வழங்கும் தி.மு.கழகம். அதேபோல் தமிழகத்தில் நாடாளுமன்றம். சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்திலும் காங்கிரஸ் ஸ்டிராங்காக இருப்பதற்கு தி.மு.கவே காரணம் என நினைக்கிறார் சோனியா.
சுருக்கமாக சொல்வதென்றால், பா.ஜ.கவுடன் திரை மறைவில் நட்பை வைத்திருக்கும் விஜய்யை விட, இன்னும் சொல்லப்போனால், ராகுலின் பிரதமர் கனவுக்கே வேட்டு வைக்கும் விஜய்யை விட, கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு தரும் திமுகவுடன் பயணிப்பது மேல் என்ற மூடில் சோனியா இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படியாக த.வெ.க.வை உதற காங்கிரஸும், காங்கிரஸை தள்ளிவிட தவெகவும் தயாராகி வருகின்றன. இடைத்தேர்தல் முடிவுகளுக்காக மட்டுமே இரு கட்சிகளும் வெயிட்டிங்" என்று சொல்லி முடித்தார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் கேட்டபோது, 'தவெக -காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது. ராகுல் சந்திப்பை முதல்வர் விஜய் நிராகரித்தார் என்பதெல்லாம் பொய் முதல்வர் விஜய்யை சந்திக்க இதுவரை எந்த அப்பாயின்மென்ட்டையும் ராகுல் கேட்கவில்லை என்றார் உறுதியாக பா.ஜ.க. தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறார் பிரதமர் மோடி இதில் முதல்வர் என்ற முறையில் விஜய் பங்கேற்பது அரசு மரபு, இதை அரசியலாக்கக் கூடாது. மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செல்வதில் தவறு எதுவும் இல்லை" என்றார் அழுத்தமாக.
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்!
(கு.கணேஷ்குமார்)
What's Your Reaction?

