சிறையில் இருந்தபடியே இம்ரான்கான் சாதித்தது எப்படி?
பெருவாரியான பாகிஸ்தான் இளைஞர்கள் இம்ரான் கானை மாற்று அரசியல் சக்தியாகப் பார்க்கின்றனர்.
பாகிஸ்தானில் சிறையில் இருந்தபடியே இம்ரான்கான் சாதித்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
சிறையில் இருந்தபடியே சாதித்துக்காட்டிருக்கிறார் பாகிஸ்தானின் தேசிய நாயகன் இம்ரான் கான்.பாகிஸ்தான் ராணுவத்துடன் மோதல் போக்கை கடைபிடித்த இம்ரான் கான், பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உட்கட்சித் தேர்தல் நடத்தாதது தொடர்பான பிரச்சினையில் இம்ரான் கானின் PTI கட்சி, நாடாளுமன்ற மற்றும் மாகாணத் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தது. இருந்தபோதும், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் இம்ரான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றனர். பாகிஸ்தானின் சக்திவாய்ந்த அமைப்பான ராணுவத்தை எதிர்த்து, சிறையில் இருந்து இம்ரான்கான் சாதித்தது பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் புதியஅலை அரசியலுக்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது. எப்படி சாதித்தார் இம்ரான்கான்?
1970களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள் நுழைந்த இம்ரான்கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றின் ஆகச் சிறந்த கேப்டனாக கொண்டாடப்படுகிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெள்ளை அணிகளை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு நம்பிக்கையை ஊட்டினார் அவர். பர்கி என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவரான இம்ரான்கான், திறமையாளர்களை கண்டெடுத்து அவர்களை பட்டை தீட்டுவதில் வல்லவர். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அப்துல் காதிர் போன்ற ஜாம்பவான் வீரர்களை உருவாக்கியவர் இம்ரான்தான். கராச்சி, லாகூர் என்று பெரு நகரங்களின் ஆட்டமாகவும் செல்வந்தர்களில் ஆட்டமாகவும் இருந்த கிரிக்கெட்டை பாகிஸ்தான் முழுமைக்கும் கொண்டு சென்றதோடு அனைத்து தரப்பினரின் ஆட்டமாக வளர்த்தெடுத்தார்.
இம்ரான் கானின் வரவுக்குப் பின்னர்தான் பாகிஸ்தான் அணியை கிரிக்கெட் உலகம் பொருட்படுத்தத் தொடங்கியது. இம்ரான்கான் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டதற்கு அவருடைய ஆக்ஸ்ஃபோர்ட் கல்விக்கும் பெரும் பங்குண்டு. பந்துவீச்சின் நுட்பங்களையும் தலைமைப் பண்பையும் அங்குதான் அவர் வளர்த்துக் கொண்டார். வேகப்பந்து வீச்சாளராக மட்டுமின்றி ஆபத்தான சமயங்களில் பேட்டிங்கிலும் அணிக்கு கைகொடுத்த அவர், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். 1992ம் ஆண்டு உலகக் கோப்பையில் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று சாதித்தது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிறகு பாகிஸ்தானின் லாகூரில் மக்களின் பயன்பாட்டிற்காக கேன்சர் மருத்துவமனையைத் தொடங்கினார்.
1996ம் ஆண்டில் தெஹ்ரீக் எ இன்சாப் கட்சியைத் தொடங்கினார் இம்ரான்கான். நிறைய திருமணங்கள் செய்தவர் என்பதால் ’பிளே பாய்’ என்று விமர்சிக்கப்படுகிறார். தனிப்பட்ட முறையில் சுதந்திர சிந்தனை கொண்டவர் என்றாலும் அரசியல்-கலாசார பிரச்னைகளில் வலதுசாரி கருத்துகளை வெளிப்படுத்துவதால் குழப்பவாதி என்று எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. நீண்ட கால போராட்டத்துற்குப் பிறகு 2018ம் ஆண்டில் இம்ரான்கானின் PTI கட்சி ஆட்சியைப் பிடித்தது. ராணுவத்தின் ஆசியுடன் இம்ரான் ஆட்சியைப் பிடித்தார் என்று எதிர்க்கட்சிகள் சாடின. இம்ரான்கான் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும், வரலாறு காணாத விலைவாசி உயர்வு ஏற்பட்டதாகவும், உலகின் முக்கிய இதழ்கள் எழுதின.
யாருக்கு முதன்மையான அதிகாரம் என்ற பிரச்னையில் ராணுவத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டார் இம்ரான்கான். இதையடுத்து, இம்ரான் கானுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் பல்வேறு விதங்களில் ராணுவம் முட்டுக்கட்டை போட்டது. நவாஸ் செரீஃப், பிலாவல் பூட்டோ போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் துணையுடன் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் 2022-ல் இம்ரான் கான் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார் இம்ரான்கான். நவம்பர் 2022ம் ஆண்டில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது அடையாளம் தெரியாத நபர்களால் இம்ரான்கான் காலில் சுடப்பட்டார். இதையடுத்து ராணுவத் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய ராணுவ அலுவலகங்களை PTI தொண்டர்கள் தாக்கினர்.
தற்போது ராணுவத் தலைமையகம் தாக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவருடைய குரலில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தல் முடிவுகள் இம்ரானுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் வரலாற்றில் அசைக்க முடியாத அரசியல் ஆளுமையாக அவர் உருவெடுத்துள்ளார். முக்கியக் கட்சிகள் வாரிசு அரசியலில் ஈடுபடுவதால் பெருவாரியான பாகிஸ்தான் இளைஞர்கள் இம்ரான் கானை மாற்று அரசியல் சக்தியாகப் பார்க்கின்றனர். அடுத்த ஆட்சியை இம்ரான் கான் அமைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?