விஜய்க்கு நெருக்கடி மேல் நெருக்கடி...தவெக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் ஸ்டாலின் அட்டாக்!
தவெக எம்எல்ஏக்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முதலமைச்சர் விஜயை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் தொடர்பாக கடந்த சில நாட்களாகப் பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையே, எம்எல்ஏக்கள் மீதான புகார்களைத் தொடர்ந்து, கட்சியின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகிகளின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று(நவ.,-11) முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏக்கள்!
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திமுக சார்பிலும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதேபோல், துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீதும் புகார் எழுந்துள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், தனது பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் தொடர்பாகப் புகார் அளிக்கச் சென்றபோது, ரவிசங்கர் தன்னைத் தாக்கியதாகக் கூறி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டம்!
தவெக எம்எல்ஏக்கள் மீதான புகார்கள் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், கட்சியின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக நேற்று(நவ.,-11) பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சர்ச்சைகளில் சிக்கியதாகக் கூறப்படும் இரு எம்எல்ஏக்களையும் தனித்தனியாக அழைத்து விஜய் விசாரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது, ஊடகங்களிடம் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதையும், பொது வெளியில் சர்ச்சைகளில் சிக்குவதையும் தவிர்க்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதைவிட மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்க்கு எதிராக ஸ்டாலின் விமர்சனம்!
இந்நிலையில், சர்ச்சைகளில் சிக்கியுள்ள எம்எல்ஏக்கள் மீது விஜய் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!” முதலமைச்சர் விஜயை விமர்சித்துள்ளார்.
What's Your Reaction?