பாஜகவுடன் கூட்டணி? அமைச்சர் சொன்ன அதிரடி பதில்!

முதலமைச்சரின் டெல்லி பயணத்திற்கு பிறகு பாஜக – திமுக கூட்டணி உருவாகுகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார். 

Oct 17, 2024 - 15:15
பாஜகவுடன் கூட்டணி? அமைச்சர் சொன்ன அதிரடி பதில்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தம் மற்றும் உலுப்பகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், பகுதிநேர நியாய விலை கடைகள் திறப்பு மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “பிரதமராக மோடி பதவி ஏற்கும் போது தமிழ்நாட்டின் முதல்வர் செல்லவில்லை. மாறாக தமிழ்நாட்டின் தேவைகளுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான போதிய நிதியை ஒதுக்க கோரியும் முதல்வர் பிரதமரை சந்தித்து பேசி உள்ளார்.

இந்த சந்திப்பால் திமுகவிற்கு பாஜகவிற்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” என்று கூறினார். 

ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் இதற்கு முன்னர் அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர் தற்போது கலந்து கொள்கின்றனர் என செய்தியாளர் கேட்டதற்கு, “ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் இதற்கு முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார். தற்போது உயர்வு கல்வித் துறை அமைச்சராக உள்ள கோவி செழியன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். இதை வைத்து திமுகவும் பாஜகவுக்கும் தொடர்பு இருக்கும் என்று முடிச்சு போட வேண்டாம்” என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திட்டவட்டமாக தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow