கர்நாடகாவில் ஒரு பேச்சுலர் கிராமம்: திருமணம் ஆகாமல் தனிமையில் புலம்பும் ஆண்கள்.. என்ன காரணம்?
"திருமணம் செய்த பின் எங்கள் ஜோண்டலகட்டி கிராமத்தில் வசிக்க மாட்டேன் என மணப்பெண் நிபந்தனையிட்டார்கள். நாங்களும் வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டு, என் 2 மகன்களுக்கு திருமணம் செய்து வைத்தேன்"

அண்டை மாநிலமான கர்நாடகவிலுள்ள ஹாவேரி மாவட்டத்திலுள்ள ஜோண்டலகட்டி கிராமம் “பேச்சுலர் கிராமம்” (Bachelor village) என அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்திலுள்ள ஆண்களை திருமணம் செய்துக்கொள்ள பெண்கள் தயங்குகிறார்கள் என முன்னணி நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
திருமணம் என்கிற சமூக கட்டமைப்பு தற்போதைய காலத்தில் இணையதளங்களில் அதிகம் விவாதிக்கப்படக்கூடிய தலைப்புகளில் ஒன்றாகும். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் வசிக்கும் ஆண்களை திருமணம் செய்துக்கொள்ள பெண்கள் தயங்குகிறார்கள் என்கிற தகவல் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
மேலே சொன்ன விஷயத்தை படிச்சதும், அந்த கிராமத்திலுள்ள ஆண்களின் குணாதிசயங்கள் மீது உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் அது தவறு. திருமணம் ஆகாமல் ஏன் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தினை தேடிப்போனால் இன்னும் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது ஜோண்டலகட்டி கிராமம்.
திருமணம் செய்ய தயங்கும் பெண்கள்- காரணம் என்ன?
அந்த கிராமத்தின் உள்கட்டமைப்பு, சுகாதாரமற்ற புறச்சூழல், தகவல் தொடர்பு வசதி இல்லாமை போன்றவை தான் அந்த கிராமத்திலுள்ள ஆண்களுக்கு திருமணம் ஆகாத சூழ்நிலைக்கு காரணமாம். 200-க்கும் மேற்பட்ட மக்கள் தொகையினை கொண்ட ஜோண்டலகட்டி கிராமத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்கள் பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண்கள் கிடைக்காமல் தனிமையில் வாடி வருகின்றனர்.
ஜோண்டலகட்டி கிராமத்திலிருந்து, முண்டகோட்-ஹுப்பள்ளி பிரதான சாலையை அடைய வனப்பகுதிகள் வழியாக சுமார் 7 கி.மீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு ஒரு போன் என இருந்த காலம் மலையேறி, வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் 2,3 போன் என பயன்படுத்த தொடங்கியுள்ள காலத்தில், ஜோண்டலகட்டி கிராமத்தில் ஒரு பாயிண்ட் சிக்னல் கிடைக்க இன்னும் தவமாய் தவமிருக்க வேண்டிய சூழ்நிலை தான் நிலவுகிறது.சுற்றி வனப்பகுதி என்பதால், அடிக்கடி வனவிலங்குகளின் தாக்குதல்/ அச்சுறுத்தல் சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.
புலம்பும் உள்ளூர்வாசி ஆண்கள்:
அந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தெரிவிக்கையில், “நான்கு வருடங்களாக நான் திருமணம் செய்ய மணப்பெண் தேடி வருகிறேன். சமீபத்தில் ஜாதகத்தில் அத்தனைப் பொருத்தமும் பக்காவாக பொருந்திய நிலையிலும், எங்கள் கிராமத்தின் சூழ்நிலையே மேற்கொள் காட்டி திருமணப் பேச்சிலிருந்து மணப்பெண் வீட்டார் பின்வாங்கி விட்டனர்” என்றார்.
மல்லப்பா என்கிற கிராம வாசி கூறுகையில், “எனது 2 மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க நான் பட்ட கஷ்டங்கள் இருக்கே.. திருமணம் செய்த பின் எங்கள் கிராமத்தில் வசிக்க மாட்டேன் என மணப்பெண் நிபந்தனையிட்டார்கள். நாங்களும் வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டு, என் 2 மகன்களுக்கு திருமணம் செய்து வைத்தேன். திருமணம் செய்து வைத்து 10- ஆண்டுகள் ஆயிற்று.. என் மகன்களும் அவர்களது குடும்பத்தினரும் எங்களை பார்க்க அரிதாகவே வருகைத் தருவார்கள். பெற்ற பிள்ளைகளே இப்படியென்றால், சொந்தக்காரர்கள் இன்னும் ஒரு படி மேலே.. இந்தப்பக்கம் தலையை கூட காட்ட விரும்புவதில்லை” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திருமணமே ஆகவில்லை.. இதில் எங்கேயிருந்து குழந்தைகள்?
திருமணம் நடைப்பெறவே வழியில்லை என்ற நிலையில், இந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பன்மடங்கு குறைந்து வருகிறது. நடப்பாண்டிற்கான பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ஒரு குழந்தைக்கூட இந்த கிராமத்தில் இல்லை. இந்த கிராமத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் (5 ஆம் வகுப்பு வரை) மொத்தமே 5 மாணவர்கள் தான் பயின்று வருகிறார்கள். அங்கன்வாடி வெறிச்சோடிப் போயுள்ளது. போகிற போக்கைப் பார்த்தால், அத்திப்பட்டி கிராமம் போல் உலக வரைப்படத்திலிருந்து ஜோண்டலகட்டி கிராமம் காணாமல் போகும் நாட்கள் வெகுத்தொலைவில் இல்லை என நெட்டிசன்கள் நக்கலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
What's Your Reaction?






