6 வயது சிறுவனை கொடூரமாக கடித்த வெறிநாய்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு. சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவிற்குட்பட்ட பிரம்மதேசம் நடுத்தெருவில் வசித்து வரும் தம்பதியினரின் மகனான 6 வயது சிறுவன், நேற்று மாலை தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த தெரு நாய் சிறுவனை கடித்துள்ளது. இதில் வலது கையில் பலத்த காயமடைந்த குழந்தையை மீட்ட அவரது பெற்றோர்கள் அருகில் வாலிகண்டபுரத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில் தடுப்பூசி செலுத்தி பின்னர் சிறுவனை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சமீப காலமாக வெளிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகியுள்ளது. இதனிடையே, ஏற்கெனவே பிரம்ம தேசம் பகுதியில் 2 பேரை வெறிநாய்கள் கடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனை கொடூரமாக வெறிநாய் கடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் வெறிநாய்களால் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு அவரச நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.
What's Your Reaction?






