KTM-க்கு போட்டியாக களமிறங்கிய யமஹா R2.. பட்ஜெட் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
புதிய 'யமஹா YZF-R2' ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த புத்தம் புதிய 'யமஹா YZF-R2' ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யமஹாவின் R15 மற்றும் R3 ஆகிய மாடல்களுக்கு இடைப்பட்ட பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கும், வீக் எண்டு பயணங்களுக்கும் ஏற்ற வகையில் இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய YZF-R2 பைக்கில் 204cc சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 26.5 பிஎச்பி பவரையும், 19.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ள இந்த எஞ்சின், நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக ஓவர்டேக் செய்யப் பெரிதும் உதவுகிறது. மேலும், வெறும் 149 கிலோ எடையுடன் 200cc பிரிவில் மிகக் குறைந்த எடை கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளதால், நகர்ப்புற நெரிசலிலும் வளைவுகளிலும் இதை எளிதாகக் கையாள முடியும்.
இந்த பைக்கின் இருக்கை உயரம் 810 மிமீ ஆக உள்ளதால், நடுத்தர உயரம் கொண்ட ரைடர்களும் எளிதாகப் பயன்படுத்தலாம். இதில் 5 அங்குல டிஎஃப்டி திரை, 3 ரைடிங் மோடுகள், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச், எல்இடி ஹெட்லைட் மற்றும் ஸ்மார்ட் கீ வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கிளட்ச் பயன்படுத்தாமல் கியர் மாற்ற உதவும் 'குயிக் ஷிஃப்ட்டர்' (Quick Shifter) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. பேஸ் வேரியண்ட் ரூ.2.30 லட்சத்திலும், குயிக் ஷிஃப்ட்டர் வேரியண்ட் ரூ.2.39 லட்சத்திலும், உயர் மாடலான R2 M வேரியண்ட் ரூ.2.53 லட்சத்திலும் (எக்ஸ்ஷோரூம்) கிடைக்கின்றன.
சந்தையில் கேடிஎம் ஆர்சி 200 (KTM RC 200) போன்ற மாடல்களுக்குப் போட்டியாகக் களமிறங்கும் இந்த பைக்கிற்கு ரூ.10,000 முன்பணத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான விநியோகம் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?

