திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்ட தீபம்... விண்ணதிர்ந்த அரோகரா முழக்கம்!
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டுப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில், கடந்த 24-ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருந்தது.
தேவைப்பட்டால் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் உதவியை நாடவும் உத்தரவிட்டிருந்தது.
அதேவேளையில், தீபத் திருநாளைத் தவிர மற்ற நாட்களில் தீபம் ஏற்ற அனுமதி கிடையாது என்றும், கோவில் நிர்வாகிகள், அதிகாரிகள் தவிர மற்ற யாரையும் மலையேற அனுமதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், இதன்படி கடந்த 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
மேலும், போலீசார் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மலையேற முயற்சி செய்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றப்படாததை உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாததற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் சிஆர்பிஎப் படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அறிவுறுத்தியிருந்தது.
மலையில் உள்ள தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. மலையில் உள்ள தர்காவில் இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான குழு கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முருகன் கோவில் மலை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனிடையே, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பரம்பரையாகப் பூஜை செய்யும் உரிமை பெற்ற ஸ்தானிக பட்டர்களுடன் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் இன்று அதிகாலையிலேயே பரபரப்பு தொடங்கியது. பக்தர்கள் குவிந்தனர். திருப்பரங்குன்றம் அருகே மேடை அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியை சிஆர்பிஎப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க, பரபரப்பு அதிகரித்தது. அவர்களை சிஆர்பிஎப் வீரர்கள் கட்டுப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்காணிப்பில் மாலை சரியாக 5 மணிக்குத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. மலை அடிவாரத்தில் குழுமியிருந்த பக்தர்கள், ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ எனப் பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர். பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
What's Your Reaction?