"பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும்..." தொழில் வளர்ச்சிக் கழகம் விண்ணப்பம்...

பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் விண்ணப்பித்துள்ளது.

Mar 1, 2024 - 14:16
"பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும்..." தொழில் வளர்ச்சிக் கழகம் விண்ணப்பம்...

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் பரப்பில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதனால், குடியிருப்புகள், விளை நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் எனக் கூறி, பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழு, பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர்நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு  வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க  நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் பொடவூர் கிராமத்தில் 32.04.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் விண்ணப்பித்துள்ளது. இதில், பரந்தூர் விமான நிலையம்  தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது. 

இதில் பரந்தூர் விமான நிலையத்தை  4 கட்டங்களாக அமைக்க ரூ.32,704 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. முதல் கட்ட கட்டுமானப் பணிகள் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு 2029-ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை வழியாக புதிய 6 வழி விமான நிலைய இணைப்புச் சாலை மூலம் அமைக்கவும்  திட்டமிடப்பட்டுள்ளது. SH-120 வழியாக சரக்கு முனையத்திற்கு புதிய இணைப்புச் சாலைகள் அமைக்கவும்  திட்டமிடப்பட்டுள்ளன. சென்னை-மைசூரு அதிவேகப் பாதையானது அருகிலேயே கடந்து செல்வதோடு, மெட்ரோ நிலையத்தை மாற்றுவதற்கான சாத்திக்கூறு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரத்யேக சரக்கு முனையம், தளவாட மையம், விமான கேட்டரிங், ஏவியேஷன் அகாடமி, MRO வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow