தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? டிக்கெட் கிடைக்கலையா? கவலை வேண்டாம்...இதோ சூப்பர் ஏற்பாடு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக இன்று முதல் 3 நாட்களுக்கு 9,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

Nov 5, 2026 - 13:00
தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? டிக்கெட் கிடைக்கலையா? கவலை வேண்டாம்...இதோ சூப்பர் ஏற்பாடு!

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் இருந்தும், பிற நகரங்களில் இருந்தும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு முடிந்து அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. இதனால் தெற்கு ரெயில்வே 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

இன்று முதல் சிறப்பு பஸ்கள்!

ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் மற்றும் கடைசி நேரத்தில் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 9,000 சிறப்பு பஸ்கள் அடுத்த 3 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமையும் அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஸ் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்!

பயணிகள் நெரிசலின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களிலும், மறைமலைநகர் மற்றும் கிளாம்பாக்கம் சி.எம்.டி.ஏ. காலநிலை பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தற்காலிக பஸ் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பயணிகளுக்கு ரூ.10-க்கு குடிநீர் பாட்டில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எந்த ஊருக்கு எங்கிருந்து பஸ்?

கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் தங்களுக்கான பஸ்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

எந்த ஊருக்குச் செல்லும் பஸ்கள் எந்த பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் என்ற விவரங்கள் மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ்களிலும் விளம்பரச் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுள்ளன. இதுதவிர பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. பஸ் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

ரெயில் நிலையங்களிலும் அலைமோதும் கூட்டம்!

தாம்பரம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களுக்குச் செல்லும் வகையில் கூடுதல் மாநகரப் பஸ்களும் இயக்கப்படுகின்றன. அதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் இன்று காலை முதலே பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் செலுத்த முடியாதவர்களும் ரெயில்களில் கூட்ட நெரிசலைப் பொருட்படுத்தாமல் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுள்ளனர்.

பஸ், ரெயில்கள் மட்டுமின்றி சொந்த வாகனங்கள் மூலமாகவும் பலர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow