இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி . தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த மூவர்.. கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை
இலங்கையில் இருந்து படகு மூலம் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்த நிலையில் அவர்களை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்பாக மண்டபம் முகாமிற்கு அழைத்து சென்றனர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடந்த ஓராண்டு காலமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களிடம் போலீசாரும், வெளியுறவு துறை அதிகாரிகளும் விசாரணை நடத்திய பின்பு அவர்களை மண்டபம் முகாமில் அமைந்துள்ள இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இவ்வாறு அகதிகளாக வந்த ஏராளமான இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு மையத்தில் ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பம் வாரியாக தனித்தனி வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 22) இலங்கையில் இருந்து ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர். அவர்கள் வருகை குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அரிச்சல் முனையில் அகதிகள் வந்திறங்கிய பகுதிக்கு போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் போதிய வருவாயின்றி தவித்ததாகவும் இதனால் தனுஷ்கோடிக்கு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் மண்டபம் முகாமிலில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
What's Your Reaction?