பேருந்தில் அருகே அமர்ந்தது குற்றமா? தீண்டாமையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு? நியாயம் கேட்கும் பழங்குடியினப் பெண்...
காவல் உதவி ஆய்வாளர் மனைவி புகாரின் பேரில் பழங்குடியின பெண்கள் கைது
தென்காசி மாவட்டத்தில், பேருந்தில் அருகே அமர்ந்த குற்றத்திற்காக தங்கள் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டிருப்பதாக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீதிகேட்டு ஆட்சியரிடம் முறையிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புகாரில், காவல் உதவி ஆய்வாளர் மனைவி தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க கூறியிருப்பதும் பேசும்பொருளாக மாறியிருக்கிறது.
சுரண்டை பகுதியில் வசிக்கும் சிம்மி, பவானி, அஞ்சலி ஆகியோர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஊர், ஊராக சென்று பழைய துணிகளை வாங்கும் தொழிலை செய்து வருகின்றனர். வழக்கம் போல், கடந்த 12-ஆம் தேதி சுரண்டையிலிருந்து கடையத்திற்கு பழைய துணிகளை வாங்குவதற்காக தனியார் பேருந்தில் இவர்கள் மூவரும் சென்றிருக்கின்றனர். அப்போது, சேந்தமரம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜின் மனைவி பால்தாய் அமர்ந்திருந்த இருக்கையில் அஞ்சலியும் அமர்ந்தார். இதை பார்த்த பால்தாய், அஞ்சலியை, வேறு இருக்கையில் அமரும்படி கூறியிருக்கிறார்.
இதற்கு அஞ்சலி நானும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் பயணிக்கிறேன், ஏன் இங்கு அமரக் கூடாது? என கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த நிலையில், பால்தாய் அடுத்த நிறுத்தத்திலேயே பேருந்தில் இருந்து இறங்கி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பேருந்து, மூன்று நிறுத்தங்களை தாண்டி சென்று கொண்டிருந்த நிலையில் பால்தாய், இரு காவலர்களுடன் வந்து பேருந்தை நிறுத்தி தனது மணிபர்ஸ் காணவில்லை என கூறியிருக்கிறார். அப்போது அவர் இருக்கை அருகே கேட்பாரறற்று கிடந்த பர்ஸை நடத்துநர் எடுத்து பால்தாயிடம் கொடுத்திருக்கிறார். ப்ர்ஸில் தாம் வைத்திருந்த தொகையை காணவில்லை என்றும், தனது பக்கத்தில் அமர்ந்திருந்த அஞ்சலி தான் திருடியிருப்பார் என்றும் பால்தாய் காவலர்களிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, விசாரணை என்ற பெயரில் அஞ்சலி, சிம்மி, பவானி ஆகியோரை காவலர்கள் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கடையம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
கைக்குழந்தை இருந்ததால் சிம்மியை மட்டும் விடுவித்த காவலர்கள், அஞ்சலி மற்றும் பவானியை சிறையில் அடைத்ததாக தெரிகிறது. பேருந்து இருக்கையில் அருகில் உட்கார்ந்த ஒரே குற்றத்திற்காக, காவல் உதவி ஆய்வாளரின் மனைவிக்கு சாதகமாக போலீசார் வழக்குபதிவு செய்திருப்பதாக சிம்மி குற்றம்சாட்டியிருக்கிறார். வயிற்று பிழைப்புக்காக பழைய துணிகளை வாங்கும் தொழிலை கொண்டிருக்கும் நாங்கள், இதுபோன்ற வீண் திருட்டு பழிக்கு ஆளாவது எந்த விதத்தில் நியாயம் என்றும், வழக்கறிஞர்களை வைத்து நீதிமன்றம் செல்ல முடியாத சூழலில் எங்களது வாழ்வாதாரம் உள்ளது என்றும் சிம்மி நியாயம் கேட்டு, தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் அமர்வதை கௌரவ பிரச்னையாக எண்ணி, பேருந்தில் பலபேர் முன் அஞ்சலியை வேறு சீட்டில் அமரும்படி கூறி அவமானப்படுத்தியது மட்டுமின்றி, அதற்கு ஒத்துழைக்காத அவர் மீது திருட்டு பட்டத்தையும் சுமத்தி சிறையில் அடைத்திருப்பது அநீதியின் உச்சமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உண்மைத் தன்மையை கடையம் காவல்நிலைய காவலர்கள் ஆராயாமல், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஏழை பெண்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பது அதிகாரதுஷ்பிரோயகம் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் கடையம் காவலர்கள் கடமை தவறினார்களா? என்ற சந்தேகம் எழுந்திருக்கும் நிலையில், அப்பாவி மக்கள் தாங்கள் நிரபராதி என்பதை நீதிமன்றம் சென்று நிருபிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?