அடேங்கப்பா.! 1,425 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்... பறக்கும் படையின் அதிரடி சோதனையில் சிக்கியது...
வண்டலூர் - மீஞ்சுர் வெளிவட்ட சாலையின் மேம்பாலம் அருகே தங்கக்கட்டிகள் பறிமுதல்
குன்றத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் சிக்கிய 1,425 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், பறக்கும் படையினர் அதிரடி சோதனைகளை நடத்தி, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு முக்கிய பகுதிகளிலும் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற பகுதிகளில் 7 பேர் கொண்ட பறக்கும் படை தீவிர சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், குன்றத்தூர் அருகே, வண்டலூர் - மீஞ்சுர் வெளிவட்ட சாலையின் மேம்பாலம் அருகே, ஸ்ரீபெரும்புதூர் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கார் மற்றும் மினி லாரியை சோதனை செய்தனர். அதில், லாரியில் அதிக அளவிலான தங்கக் கட்டிகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, விமான நிலையத்தில் இருந்து தனியார் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கிற்கு அந்த தங்கக்கட்டிகள் எடுத்துச் செல்லப்படுவதாக வாகனத்தில் வந்த ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, லாரியில் இருந்த தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன், இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வாகனங்களை இயக்கி வந்த தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால் மட்டும் தங்கக்கட்டிகள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?