அதிமுக தலைவர்களின் செல்போன் ஒட்டுக் கேட்பு...தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி மீது புகார்..

Apr 13, 2024 - 20:18
அதிமுக தலைவர்களின் செல்போன் ஒட்டுக் கேட்பு...தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி மீது புகார்..

அதிமுக தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்பதாக தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக தனது வெற்றியை பதிவு செய்தது. அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால், இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக பல்வேறு வியூகங்களையும் வகுத்து தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. 

இந்த நிலையில் அதிமுக தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்பதாக புகார் எழுந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முக்கிய நிர்வாகிகள், அவர்களது தனி உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் செல்போனை ஒட்டுக் கேட்பதாக தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரில், இஸ்ரேலில் இருந்து ரூ.40 கோடிக்கு வாங்கப்பட்ட மென்பொருள் மூலம் அதிமுக தலைவர்களின் ஐபோன்களை ஒட்டுக்கேட்டு தேர்தல் வியூகங்களை தினமும் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்பு சட்டப்படி தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, அதிமுக தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்ட தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக  வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாடு தேர்தல் களம் ஒவ்வொரு நாளும் பல திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில், அதிமுக தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பதாக எழுந்துள்ள புகார் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow