ரூ.100 கோடி நில அபகரிப்பு..தலைமறைவான எம்ஆர் விஜயபாஸ்கர்..சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ்
100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்து அபகரித்து விட்டதாக எம்ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளதை அடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத்ம் தேர்தலில் கரூர் எம்.எல்.ஏவாக வெற்றிப் பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றார். செந்தில் பாலாஜி மீது இருந்த கோபத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கரூரை சேர்ந்த எம்ஆர் விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவியை கொடுத்து அழகுபார்த்தார்.. 2016-2021 வரை அந்த துறைக்கு அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, ஜி.பி.எஸ் கருவி கொள்முதல் ஊழல் புகார் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில்தான் 100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்து அபகரித்து விட்டதாக எம்ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளது. தனது 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்று தொழிலதிபர் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதையடுத்து, கரூர்- மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதரும், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு குறித்து ஒரு புகாரளித்து இருந்தார்.
இதன் அடிப்படையில் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்ற அச்சப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜூன் 12ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை ஜூன் 25ஆம் தேதி நடந்தபோது, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதனையடுத்து எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக கரூரை விட்டு வெளியேறி தலைமறைவாக இருக்கிறாராம் விஜயபாஸ்கர்.ஒரு காலத்தில் விஜயபாஸ்கரும் பிரகாஷும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் நிலத்தை அபகரிப்பு செய்து விட்டதாக தற்போது புகார் கொடுத்துள்ளார் பிரகாஷ். காலை சுற்றிய பாம்பாக பல வழக்குகள் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது இருக்கும் நிலையில் தற்போது நில அபகரிப்பு புகாரும் இணைந்துள்ளது.
தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.மும்பை, கேரளாவில் விஜயபாஸ்கர் பதுங்கி இருக்கலாம் என தேடி வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்க எம்ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ்
வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?






