போலீஸ் கஸ்டடியில் சவுக்கு சங்கர்.. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட Redpix பெலிக்ஸ் ஜெரால்ட்

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 

May 13, 2024 - 18:07
போலீஸ் கஸ்டடியில் சவுக்கு சங்கர்.. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட Redpix பெலிக்ஸ் ஜெரால்ட்

பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இதனிடையே கடந்த 6 ம் தேதி மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். 

மனுவை விசாரித்த கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் சவுக்கு சங்கருகான சிகிச்சையை வழங்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டதில் வலது கையில் இரண்டு இடங்களில் லேசான எலும்பு முறிவு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்காக மாவு கட்டு போட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாவு கட்டு போட்டு சிறைக்கு அழைத்து சென்றனர். 

சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது கோவை நான்காவது நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

விசாரணைக்கு பின்னர் நாளை மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், நாளை மாலை 5 மணி வரை நடைபெறும் விசாரணையின் போது ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும், ஒரு முறை என 15 நிமிடம் வழக்கறிஞரை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளதாக தெரிவித்தார்.

காவல் முடிந்ததும், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது. சிறையில் மனநலம் பாதிக்கப்பட்ட  அறையிலிருந்து மாற்றப்பட வேண்டும். சிறைத்துறையில் நடப்பதை அப்போது சொல்வோம். குண்டர் சட்டத்திற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம். அதற்கு கால அவகாசம் உள்ளது என்று வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதற்கிடையில் சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் கைது செய்த தனிப்படை போலீசார், அவர் மீது  ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவு படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட், பின்னர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயசுதா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் பெலிக்ஸ் ஜெரால்டு அடைக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow