மாட்டிறைச்சி எடுத்துச்சென்ற மூதாட்டி - நடு காட்டில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துனர்...

Feb 22, 2024 - 10:03
Feb 22, 2024 - 17:06
மாட்டிறைச்சி எடுத்துச்சென்ற மூதாட்டி - நடு காட்டில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துனர்...

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற மூதாட்டியை வனப்பகுதியில் இறக்கிவிட்ட நடத்துனரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நவலை கிராமத்தைச் சேர்ந்த 59 வயது மூதாட்டி பாஞ்சாலை. அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இவர், கணவர் இறந்த பின் கடந்த 30 ஆண்டுகளாக நாள்தோறும் அரூருக்குச் சென்று மாட்டிறைச்சி வாங்கி "சுக்கா" சமைத்து விற்பனை செய்து அதில் கிடைக்கம் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறார். 

அதன்படி வழக்கம்போல் அரூரில் மாட்டிறைச்சி வாங்கிக் கொண்டு பாஞ்சாலை அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பயணச்சீட்டு கொடுக்கச் சென்ற நடத்துனர் ரகு என்பவர், "மாட்டிறைச்சி வாங்கிக்கொண்டு பேருந்தில் வராதே என்று சொன்னால் புரியாதா? உடனடியாக இறங்கு.. " எனக்கூறி பேருந்தை அரூர் அருகே மோப்பிரிப்பட்டி காட்டுப்பகுதியில் நிறுத்த ஓட்டுநரை வலியுறுத்தினார். தொடர்ந்து பேருந்து நிற்கவே, பதறிய மூதாட்டி பாஞ்சாலை, இன்று ஒரு சேமிப்புக் குழுவுக்கு பணம் கட்ட வேண்டும், அவசரமாக செல்ல வேண்டும் எனபதால் இந்த பேருந்தில் ஏறியதாகவும், இன்று ஒருநாள் மட்டும் பயணித்துக்கொள்கிறேன் எனக்கூறி கெஞ்சியதாக கூறப்படுகிறது.

கிழே இறங்காத வரை பேருந்து ஒரு இன்ச் நகராது என நடத்துனர் ரகு ஆவேசமாக கத்த, மூதாட்டி வேறு வழியின்றி காட்டுப்பகுதியில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது. சுற்றும் முற்றும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில், தான் அணிந்திருக்கும் கவுரிங் செயினை, தங்கம் என நினைத்து, தன்னை தாக்கி திருடர்கள் வழிப்பறி செய்து விடுவார்களோ என்ற பயத்தில் மூதாட்டி தான் அணிந்திருந்த கவுரிங் செயினை கழற்றி சுருக்கு பையில் போட்டுவிட்டு, நவலை கிராமத்தை நோக்கி நடந்தார். உடல் நலம் குன்றிய மூதாட்டி, சுள்ளென அடிக்கும் வெயிலில் தள்ளாடியபடி 2 கி.மீ நடந்து செல்ல, அவ்வழியாக வந்த தனியார் பேருந்தை நிறுத்தி ஏறி ஒருவழியாக நவலை கிராமத்திற்கு சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பான செய்தி இணையத்தில் பரவவே வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து தர்மபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம்  நடத்துனர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமாரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க:

https://kumudam.com/Boy-friend-murder-girlfriend-who-refused-to-live-after-marriage

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow