10 மணிக்கு தொடங்கி 127 நிமிடங்கள் உரை..! நிதியமைச்சராக தங்கம் தென்னரசுவின் முதல் பட்ஜெட்.. என்னென்ன சிறப்புகள்..!
தனது முதல் பட்ஜெட் உரையை, 2 மணி நேரம் 07 நிமிடங்களுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் காலை10 மணிக்கு தொடங்கி சுமார் 127 நிமிடங்கள் வரை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது முதல் பட்ஜெட்டை வாசித்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நிதியமைச்சராக சட்டப்பேரவையில் முதன்முறையாக 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது.அதன்படி பட்ஜெட்டுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் தனது இருக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அமர்ந்தார். தொடர்ந்து அவை நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து சபாநாயகர் அப்பாவு அழைப்பின்பேரில், அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கினார்.
சரியாக காலை 10.00 மணிக்கு “காட்சிக்கு எளியன்” என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு பட்ஜெட் உரையை அமைச்சர் ஆரம்பித்தபின், சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையின் வரலாறுகளை பட்டியலிட்டுப் பேசினார். தொடர்ந்து 2024-2025ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை அமைச்சர் முழுமையாக விளக்கினார்.
மொத்தம் 164 பக்கங்கள் கொண்ட பட்ஜெட் உரையில் பல்வேறு அரசு துறைக்களுக்கான நிதி ஒதுக்கீடு, சிறப்பு திட்டங்களுக்கான நிதி, வரவு-செலவுகள் உள்ளிட்ட தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து தமிழ்நாடு வெள்ள பாதிப்புகளுக்கு உரிய நிதி அளிக்கவில்லை உள்ளிட்டு மத்திய அரசு மீது கடைசியாக குற்றம்சாட்டிய அவர், புறநானூற்றுப் பாடலைக்கூறி நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையை நிறைவு செய்தார். இவ்வாறாக தனது முதல் பட்ஜெட் உரையை, 2 மணி நேரம் 07 நிமிடங்களுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைத்தார்.
இதையடுத்து சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். தொடர்ந்து நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?