மாற்றுப் பாலினத்தவர் கல்வி பயில நிதி ஒரு தடையில்லை..! பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள்.. மகளிருக்கு ஸ்பெஷல் அறிவிப்பு..! 

மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கான மானியத்தொகையாக ரூ.3,050 கோடி ஒதுக்கப்படுகிறது.

Feb 19, 2024 - 12:54
Feb 19, 2024 - 12:56
மாற்றுப் பாலினத்தவர் கல்வி பயில நிதி ஒரு தடையில்லை..! பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள்.. மகளிருக்கு ஸ்பெஷல் அறிவிப்பு..! 

மாற்றுபாலினத்தவரின் கல்லூரிப் படிப்புக்கான செலவு அரசே ஏற்பு, புதுமைப்பெண் திட்டத்திற்கு ரூ.370 கோடி ஒதுக்கீடு என பெண்கள் - மாற்றுபாலினத்தவர் சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் கவனம் பெற்றுள்ளது.

சட்டப்பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும் என அறிவித்தார். ஒவ்வொரு மாதமும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் மகளிரின் வங்கி கணக்குகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

ரூ.13,720 கோடி நிதியானது மகளிர் நலன் காக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் எனவும் புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார். வரும் ஆண்டில் 10,000 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் ஏற்படுத்தப்படும் எனக்கூறிய அவர், உயர்கல்வியை தொடர நினைக்கும் மாற்று பாலினத்தவருக்கு கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் கூறினார். 

ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை அறிவித்த நிதியமைச்சர், புதுமைப் பெண் திட்டத்திற்கு ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாற்று பாலினத்தவரை பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கான மானியத்தொகையாக ரூ.3,050 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow