அஜித்... அடுத்து சிவகார்த்திகேயன்... விஜய்யை வீழ்த்த பாச வலை வீசுகிறதா திமுக?
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் திரைப்பிரபலங்களை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வர திமுக நினைப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது. இதன் வெளிப்பாடுதான் அஜித் மற்றும் சிவகார்த்திகேயனை திமுக நாடுவதாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி இருக்கும், அமரன் திரைப்படம் பரபரப்பு பட்டாசைப் பற்ற வைத்திருக்கிறது. இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும் ஒன்று சேர்ந்து சிறப்புத் திரையிடலில் அமரன் படத்தைப் பார்வையிட்டதுதான்.
நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அழைப்பின் பேரில் இந்த திரைப்படத்தை பார்வையிட்டதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் இயக்குநர் ராஜ்குமார் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கி இருப்பதாகவும் திரைப்படம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திரைப்படத்தை பார்வையிட்ட பின்னர், கமல்ஹாசனுடன் தொலைபேசியில் வாழ்த்தும் தெரிவித்திருந்தார். வழக்கமாக ஜெய்பீம், அசூரன் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பான படங்களைப் பார்வையிட்டு தனது கருத்துக்களை முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிடுவதுண்டு. இந்த முறை அமரன் படத்தைப் பார்த்து கருத்து பகிர்ந்திருப்பது, நடிகர் விஜய்யைப் போலவே ரசிகர் கூட்டம் வைத்திருக்கும் சிவகார்த்திகேயனை தங்கள் பக்கம் வளைப்பதற்காக என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய் சமீபத்தில் நடத்திய மாநாட்டில் திராவிடமாடலை இடித்துக் கூறியதில் இருந்து திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பது அம்பலமானது.
இது திமுக கூடாரத்துக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்தான், விஜய்க்கு எதிராக காய் நகர்த்த அவரைப் போன்றே ரசிகர் பலம் கொண்ட நடிகரை தங்கள் வசமாக்கும் முனைப்பில் இருந்ததாகவும், அதற்கேற்ப சிவகார்த்திகேயன் மீது திமுகவின் பார்வை பதிந்திருப்பதாகவும் கூறுகிறார்கள் அவர்கள். அதற்கு அமரன் ஒரு துருப்புச்சீட்டாகவும் ஆகி இருக்கிறது.
அதே நேரம் விஜய்க்கு தொழில் ரீதியாக எதிரானவர்களையும் ஒருங்கிணைக்கும் அசைன்மெண்டும் திமுக தரப்பில் எடுக்கப்படுவதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. அதன் முதல் அடியாக நடிகர் அஜீத்துக்கும் வாழ்த்து வலையை வீசியிருக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
உலக அளவில் சிறப்புக்குரிய கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் உதயநிதி பகிர்ந்திருந்தார். அதேபோல தமிழக அரசின் லோகோவை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்ததாகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார் என்றும் பதிவிட்டிருந்தார்.
இதனைச் சுட்டிக்காட்டிய பா.ஜ.க. மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தர்ராஜன், விஜய்க்கு கோபத்தை வரவழைக்க அஜித்துக்கு உதயநிதி வாழ்த்துச் சொல்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
கடந்த 2010ஆம் ஆண்டு பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்றபெயரில் தமிழ் திரையுலம் சார்பில் கருணாநிதிக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. அப்போது பேசிய அஜித், இதுபோன்ற அரசியல் விழாக்களில் சினிமாக்காரர்கள் தலையிட வேண்டாம் என்று அறிக்கை விடுமாறு கருணாநிதிக்கு கோரிக்கை வைத்தார். தங்களை கட்டாயப்படுத்தி விழாவுக்கு வரவழைப்பதாகவும், வரவில்லை என்றால் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று மிரட்டுவதாகவும், இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும் கூறினார். அஜித்தின் இந்த பேச்சுக்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். அந்த சமயத்தில் இது மிகப்பெரிய சர்ச்சையானதோடு, இதற்காக கருணாநிதியை நேரில் சந்தித்து அஜித் மன்னிப்பு கோரியதாகவும், அப்போது அவர் திட்டியதால் அஜீத் கலங்கிய கண்களோடு கோபாலபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாகவும் கூறப்பட்டது. இதன் பின்னர் அஜீத்துக்கு ஜெயலலிதா தரப்பில் இருந்து ஆதரவுக்கரம் நீட்டப்பட்டதாகவும் தகவல் பரவியது.
தற்போது இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள் கருணாநிதி காலத்தில் அஜித்தோடு முரண்பட்டிருந்த திமுக, இப்போது அஜித்துக்கு வாழ்த்து தெரிவிப்பது விஜய்க்கு போட்டியாக இல்லாமல் வேறு என்ன என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்...
அஜித்துக்கு வாழ்த்து வலை, அமரன் மூலம் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு வலை வரிசையில் அடுத்து யாருக்கு வலைவீச இருக்கிறதோ திமுக?
What's Your Reaction?