கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் ஒன்பது பேரை விடுதலை செய்து கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார், கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள தொட்டகஜனூரில் உள்ள  பண்ணை வீட்டில் இருந்து,   சந்தன மரக்கடத்தல் வீரப்பன் தலைமையிலான குழுவினரால் கடத்தப்பட்டார். அவருடன் மேலும் மூன்று பேரும் கடத்திச் செல்லப்பட்டனர்.

108 நாட்களுக்குப் பின், கர்நாடக - தமிழக அரசுகளின் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து  நவம்பர் 15ம் தேதி ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். இந்த கடத்தல் தொடர்பாக வீரப்பன், சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன், மாறன், கோவிந்தராஜ், அன்றில், செல்வம், அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், பொட்டுசாமி, ராமா ஆகிய  14 பேர் மீது தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு  சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், 2004ம் ஆண்டு வீரப்பன், அவருடைய கூட்டாளிகள் சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் தர்மபுரி அருகே அதிரடிப்படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மீதமுள்ள ஒன்பது பேர் மீதான வழக்கை விசாரித்த கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றம், முக்கிய சாட்சிகளான ராஜ்குமார், அவரது மனைவி பர்வதம்மாவிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் பிணைத் தொகை கேட்கும் ஆடியோ கேஸட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறி, ஒன்பது பேரையும் விடுதலை செய்து 2018ம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு, காவல் துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து, கோபிச்செட்டிபாளையம் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow