14 நாட்களில் 76 தமிழக மீனவர்கள் கைது... மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (மார்ச் 21) கைது செய்தனர். இதையடுத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்திட வலியுறுத்தியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், அண்மைக் காலமாக தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தாமதமின்றி தீர்வு காண தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?