திருச்சியில் மார்ச். 24-ல் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம்.. கே.பி.முனுசாமி தகவல்

கடைசி நேரத்தில் கூட்டணி மாறிய பாமகவுக்கு தர்மம் பதில் தரும் என்று முன்னாள் அமைச்சர் முனுசாமி பேச்சு

Mar 20, 2024 - 08:30
Mar 20, 2024 - 08:31
திருச்சியில் மார்ச். 24-ல் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம்.. கே.பி.முனுசாமி தகவல்

திருச்சியில் வரும் 24-ம் தேதி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளதாக கே.பி.முனுசாமி கூறியிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டு, பிரசாரங்கள் தொடங்கியுள்ளன. மறுபுறம் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் அறிமுகங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், திருச்சியில் வரும் 24-ம் தேதி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது. 

திருச்சியில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மேடை ஏற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி‌.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? என்பதை 24-ம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

தற்போது ஜெயலலிதாவை புகழ்ந்து பேசும் பிரதமர் மோடி, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, எம்ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இகழ்ந்து பேசியபோது ஏன் கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதிமுக கூட்டணிக்கு வருவதாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, திடீரெனக் கூட்டணி மாறிய பாமகவுக்கு தர்மம் பதில் தரும் என்றும் பேசினார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயநலவாதி என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow