தமிழ்நாட்டில் 100 சதவிகித வாக்குப்பதிவு சாத்தியமாகுமா?.. கடந்த கால தேர்தல்களில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

கடந்த 17வது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் அதிக வாக்குப்பதிவானது. எந்த தொகுதியில் குறைவான வாக்கு பதிவானது மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற தவறியவர்கள் என்று பார்க்கலாம்.

Apr 18, 2024 - 16:31
தமிழ்நாட்டில் 100 சதவிகித வாக்குப்பதிவு சாத்தியமாகுமா?.. கடந்த கால தேர்தல்களில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (19-04-2024)ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 100 சதவிகித வாக்குப்பதிவுக்காக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது தேர்தல் ஆணையம். கடந்த 17வது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் அதிக வாக்குப்பதிவானது. எந்த தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற தவறியவர்கள் என்று பார்க்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.19 கோடி. இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 3.04 கோடி. பெண்களின் எண்ணிக்கை 3.15 கோடி. தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 8294. நூறு வயதை எட்டியவர்களின் எண்ணிக்கை 8,765. முதல் முறையாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 9.18 லட்சம் பேர். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 950 வாக்காளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.91 கோடி. பதிவான மொத்த வாக்குகள் 4.22 கோடி, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவிகிதம் 71.87. 

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தமிழத்தில் மக்களவைத் தொகுதிகளுக்கு 71.87 சதவீதம் வாக்குகள் பதிவானது. வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து 38 தொகுகளில் மட்டுமே கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 

அதிகபட்சமாக தருமபுரியில் 80.49 சதவீத வாக்குகளும், நாமக்கலில் 79.98 சதவீத வாக்குகளும் கரூரில் 79.11 சதவீத வாக்குகளும் பதிவானது. குறைந்தபட்சமாக, தென் சென்னையில் 56.41 சதவீத வாக்குகளும், மத்திய சென்னையில் 59.25 சதவீத வாக்குகளும் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழா நடைபெற்ற மதுரையில், 65.83 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.

100 சதவிகித வாக்குப்பதிவு என்று தேர்தல் ஆணையம் செய்த பிரச்சாரங்கள் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. புதிய வாக்காளர்கள் வாக்களித்தும் இந்த ஆண்டு 72% மட்டுமே எட்ட முடிந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்களில், ஒன்றரை கோடி பேருக்கு மேல் வாக்களிக்கவில்லை என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  தெரிவித்தார். அதாவது மொத்த வாக்காளர்களில் 28 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை. இது 1 கோடியே 66 லட்சம் வாக்காளர் எண்ணிக்கையைக் குறிக்கும். ஜனநாயக கடமை என பிரச்சாரம் செய்யப்பட்டாலும் பல காரணங்களால் வாக்களிப்பது குறைந்துள்ளது. 

அதே நேரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளைவிடக் குறைவு. கடந்த 2014ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்கள் 5.3 கோடி, பதிவான வாக்குகள் 4.3 கோடி. பதிவான வாக்கு சதவிகிதம் 73.82. ஆகும்.

கடந்த 1951ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை நடந்த 17 மக்களவை தேர்தல்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வாக்குகள் சதவீதம் எவ்வளவு பதிவாகியுள்ளன.

கடந்த 1951-52 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 1.99 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். 56.33% வாக்குகள் பதிவானது. 1957ஆம் ஆண்டு 47.75% வாக்குகள் பதிவானது. 1962 ஆம் ஆண்டு 68.77% வாக்குகள் பதிவானது 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் 76.56% வாக்குகள் பதிவானது. 

1971ஆம் ஆண்டு 71.82% வாக்குகள் பதிவானது. 1977ஆம் ஆண்டு மொத்தம் 67.13% வாக்குகள் பதிவானது. 1980 ஆம் ஆண்டு 66.76% வாக்குகளும், 1984 ஆம் ஆண்டு 72.98% வாக்குகளும் பதிவானது. 1989 ஆம் ஆண்டு 66.86% வாக்குகளும் 1991ஆம் ஆண்டு மொத்தம் 63.92% வாக்குகள் பதிவானது. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 66.93% சதவிகித வாக்குகளும், 1998 ஆம் ஆண்டு 57.95% வாக்குகளும் பதிவானது. 

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 57.98% வாக்குகளும், கடந்த 2004ஆம் ஆண்டு 60.81% சதவிகித வாக்குகள் பதிவானது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 72.94% வாக்குகள் பதிவானது. கடந்த 2014 ஆம் ஆண்டு 73.74% வாக்குகள் பதிவானது. கடந்த 

2024ஆம் ஆண்டு 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளைய தினம் (19-04-2024) ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவிகித வாக்குப்பதிவு சாத்தியமாகுமா? மக்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவார்களா பார்க்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow