குழந்தைகளை வெட்டிக் கொன்ற நபர் - சுட்டு வீழ்த்திய போலீஸ்....
கடைக்கு தீ வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 2 சிறார்களை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த நபர், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
படவுன் நகரின் பாபா காலனியில் உள்ள குடியிருப்பின் மாடியில் சுமார் 11 மற்றும் 6 வயதுடைய 2 சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மாடிக்குச் சென்ற மர்ம நபர் ஒருவர், சிறார்களை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார்.
தகவலறிந்து போலீசார் அங்கு வந்த போது அந்த நபர் தப்ப முயன்றார். அவரை விரட்டிப் பிடிக்க முயன்றபோது போலீசார் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், சிறார்கள் கொலையைக் கண்டித்து மண்டி சமிதி அவுட்போஸ்ட் பகுதியில் பொதுமக்கள் ஒரு கடைக்கு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த ஐஜி ராகேஷ் குமார், குற்றவாளிக்கு 20-30 வயது இருக்கும் எனவும் கொலையாளி யார்? என்பது குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
What's Your Reaction?






