ஆம்புலன்ஸ் மூலம் இடையூறு.. திமுகவின் கேவலமான அரசியல்- இபிஎஸ் புகார்!
”ஸ்டாலின் எந்தெந்த மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தினாரோ, அந்த திட்டங்கள் எல்லாமே அடுத்த அதிமுக ஆட்சியில் மீண்டும் தொடரும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், கலசப்பாக்கம் மற்றும் போளூர் தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர், அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை” என்று இபிஎஸ் குறிப்பிட்டார்.
ஆம்புலன்ஸ் மூலம் இடையூறு:
கூட்டத்தில் உரையாற்றிய இபிஎஸ், “நான் பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். வேண்டுமென்றே கூட்டத்துக்கு நடுவே ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசு செய்து வருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எங்களை எதுவும் செய்ய முடியாது. தி.மு.க.வுக்கு தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும்” என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், “மக்கள் கூட்டத்துக்கு இடையில் ஆம்புலன்ஸ் வந்தால், மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது? இந்த ஆம்புலன்ஸில் நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே செல்கிறது. இதை 30 கூட்டங்களில் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம்” என்றார்.
திமுக ஆட்சி மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சி:
” திமுக ஆட்சி, மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாக உள்ளது. அதிமுக ஆட்சியின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தியதுதான் தி.மு.க.வின் சாதனை. ஸ்டாலின் எந்தெந்த திட்டங்களை நிறுத்தினாரோ, அந்த திட்டங்கள் எல்லாமே அடுத்த அதிமுக ஆட்சியில் மீண்டும் தொடரும்.
அணைக்கட்டு மக்கள் விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள். விலைவாசி உயர்வால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து மளிகைப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசுக்குத் திறமை இல்லை. அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டு நிதியாக ₹100 கோடி ஒதுக்கி, அண்டை மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கினோம். இப்போது விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படாத பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்” என இபிஎஸ் குறிப்பிட்டார்.
மகளிர் உரிமைத் தொகை நாடகம்:
” ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் மகளிர் உரிமைத் தொகை கொடுத்ததைப் பற்றியே பேசுகிறார். அதிமுக அழுத்தம் கொடுத்ததால்தான் 28 மாதங்கள் கழித்து அதை வழங்கினர். இப்போது சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் விதிகளைத் தளர்த்தி மேலும் 30 லட்சம் பேருக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். குடும்பத் தலைவியின் கஷ்டத்தைப் பார்த்து ஸ்டாலின் கொடுக்கவில்லை, தேர்தல் வருவதால் வாக்குகளுக்காகக் கொடுக்கிறார். தேர்தல் வரும்போதெல்லாம் நாடகத்தை அரங்கேற்றும் கட்சி திமுக.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொடுப்பதாக அறிவித்து கைவிட்டுவிட்டார், தூய்மைப் பணியாளர்களையும் கைவிட்டுவிட்டார். தேர்தல் வந்தால் அழகழகாகப் பேசுவார்கள், ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவார்கள்.
100 நாள் வேலைத்திட்டத்தில் பொய்யை பேசி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு 150 நாட்களாக உயர்த்தவில்லை. மாறாக, 50 நாட்களாகக் குறைந்துவிட்டது. அவர்களுக்கான சம்பளத்தையே அதிமுகதான் மத்திய அரசிடம் பேசி வாங்கிக் கொடுத்தது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக” என குறிப்பிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
”அதிமுக, மக்களுக்கான கட்சி, மக்களுக்கான அரசு. மக்களின் எண்ணத்துக்கு ஏற்றவாறு செயல்படும். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஒரு ‘ஃபெயிலியர் மாடல் அரசு’. ‘பை பை ஸ்டாலின்’” என்று கூறி தனது உரையை முடித்தார் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
What's Your Reaction?






