எஸ்பிபிஐயும் விட்டு வைக்காத ஏஐ.. பரபரப்பு புகாரை கிளப்பும் சரண்..! எல்லை மீறுகிறதா செயற்கை நுண்ணறிவு?
எஸ்பி.பி.,குரலை பயன்படுத்தப்படுவது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், அனுமதி பெறாமலும் பயன்படுத்தப்படுவது என்பது வேதனை

எங்கெங்கும் காணினும் ஏஐ தான் என்பது போல கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த பேச்சுகள் தான் இணைய உலகை ஆக்கிரமித்துள்ளன. ஒருபுறம் வேலைகளை எளிதாக்குகிறது என்றாலும் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. அப்படி ஒரு சர்ச்சையோடு தான் கிளம்பியிருக்கிறார் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண்.,
இன்று உலக அளவில் பல்வேறு சாதனைகளை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசை தோற்றுவித்தவர் ஆல்ஃப்ரட் நோபல். இவர் தான் டைனமைட் எனப்படும் வெடிமருந்தை கண்டறிந்தவர். இந்த கண்டுபிடிப்பால் அவரது சகோதரனையே இழக்க நேரிட்டது. உலக அளவில் மிகப்பெரும் பணக்காரராக நோபலை டைனமைட் மாற்றினாலும் தற்போது வரை லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகிறது. அப்படி ஒரு சிக்கலான விஷயமாக மாறியிருக்கிறது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு..
உலகில் அற்புதப் படைப்பான மனிதர்களைப் போலவே சிந்திக்கும் கம்யூட்டர்களை படைக்க வேண்டும் என்ற ஆவல் தான் தற்போது செயற்கை நுண்ணறிவு என்ற அசுர பாய்ச்சலைக் கண்டுள்ளது. அதே நேரத்தில் மனிதர்களின் அறிவைப் புகட்டலாம். காதல்,கருணை உள்ளிட்டவற்றை கம்யூட்டர்களுக்கு புகட்ட முடியுமா?
முடியாது என்றாலும் பின்னாட்களில் அது சாத்தியம் என்கின்றனர் நிபுணர்கள். தற்போதைக்கு இணைய உலகில் கொட்டிக் கிடக்கும் தரவுகளை ஒருங்கிணைத்து அதனை ஒரு சூப்பர் கம்யூட்டருக்கு புகட்டி சிறந்த தகவல்களையும் முடிவுகளை பெறுவதே ஏஐ என சுலபமாக புரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் சில சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு மார்ஃபிங், கிராஃபிக்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். கடந்த காலங்களில் பல பிரபலங்கள் இந்த தொழில்நுட்பத்தால் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தற்போதும் ஏஐ-ஆல் பலரும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி ராஷ்மிகா மந்தனா வரை டீப் ஃபேக் வீடியோ மற்றும் ஆடியோக்களில் சிக்கி இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏஐ-ஆல் சிக்கல் மட்டுமே உள்ளதா? என கேள்வி எழலாம். நிச்சயமாக இல்லை.. இருமுனையும் கூராக உள்ள கத்தியைப் போன்றது ஏஐ. அதனை கையாளவதில் தான் அதன் பயன்பாடு உள்ளது.
இன்னும் 20 ஆண்டுகளில் பல துறைகளில் சுமார் 90 சதவீத பணிகளை ஏஇ ஆக்கிரமித்திருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சினிமாவில் திரைக்கதை தொடங்கி செய்தி வாசிப்பது வரை தற்போதே ஏஐயின் செயல்பாடுகள் பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாகியுள்ளது. ஏன் ஏஆர் ரகுமான் கூட மறைந்த பாடகர்களின் குரலை மீட்டுருவாக்கும் செய்து தனது படத்தில் பயன்படுத்தியுள்ளார். லால் சலாம் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் குரல்களை அவர் உயிர்ப்பித்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். தொழில்நுட்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால், அது ஒரு அச்சுறுத்தலும், தொல்லையும் அல்ல' என்கிறார் ஏ.ஆர்.ஆர். இதற்காக அவர்களின் குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெறப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் மறைந்த பாடகர் எஸ்பிபியின் குரலை ஏஐ மூலம் மீட்டுருவாக்கம் செய்ய தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவர் முயற்சிக்க, அதற்கு தங்கள் அனுமதி பெறவில்லை என புகாரை கிளப்பியுள்ளார் அவரது மகனும், பாடகருமான எஸ்பிபி சரண். தெலுங்கில் பிரபலமான தருண் பாஸ்கர் தானே இயக்கி நடித்துள்ள கீடா கோலா படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகியது. இந்த படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் விவேக் சாகர் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
தனது தந்தையின் குரலை பயன்படுத்தியது குறித்து தங்களிடம் முன் அனுமதி பெறவில்லை என எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் புகார் கூறியுள்ளதோடு, இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “எனது அப்பா மறைவுக்குப் பிறகு தொழில்நுட்பம் மூலம் அவரது குரல் பயன்படுத்தப்படுவது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், அதை எங்களுக்குத் தெரியாமலும், அனுமதி பெறாமலும் பயன்படுத்தப்படுவது என்பது வேதனையான விஷயம். வணிகச் சுரண்டலுக்காக ஒரு லெஜெண்டின் குரல் இப்படிப் பயன்படுத்தக் கூடாது.
தற்போதும், வருங்காலத்திலும் இதே நிலை தொடர்ந்தால், இசைத் துறையில் தங்களது குரலை சொத்தாக கருதும் பாடகர்களின் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும்” கூறியுள்ளார். மேலும் முறையான அனுமதி பெறாமல் எனது தந்தையின் குரலை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும், ராயல்டியில் குறிப்பிட்ட பங்கை கொடுக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தான் தற்போது தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லது தமிழ் திரையுலகிலும் பேசுபொருளாகியுள்ளது.
What's Your Reaction?






