இன்று தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்.. முதன்முறையாக வாசிக்கும் தங்கம் தென்னரசு..! எதிர்பார்ப்புகள் என்னென்ன?

கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம் உள்ளிட்ட 7 சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

Feb 19, 2024 - 06:34
Feb 19, 2024 - 07:47
இன்று தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்.. முதன்முறையாக வாசிக்கும் தங்கம் தென்னரசு..! எதிர்பார்ப்புகள் என்னென்ன?

2024–25ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதில் அரசு தயாரித்த உரையின் முதல் பத்தியை மட்டும் வாசித்த ஆளுநர், 3 நிமிடங்களில் உரையை முடித்துவிட்டுக் கிளம்பினார். இதையடுத்து, உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்த நிலையில், ஆளுநர் கூடுதலாக இணைத்து படித்தவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14-ம் தேதியும் விவாதம் தொடர்ந்த நிலையில், பிப்ரவரி 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார். அதன் பின்னர் விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில், 3 நாட்களுக்குப் பின் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. முன்னதாக நேற்று (பிப்.18-ம் தேதி) பட்ஜெட்டுக்கான இலச்சினையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. “தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி” என்ற கருப்பொருளுடன் இலச்சினை வெளியாகியுள்ள நிலையில், சட்டப்பேரவை வரலாற்றில் பட்ஜெட்டுக்கு இலச்சினை வெளியிடுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று காலை 10 மணிக்குக் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் 2024 - 2025 நிதி ஆண்டிற்கான மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, பிப்ரவரி 20-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கலாக உள்ளது. இதை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். 

பின்னர், பிப்ரவரி 20-ம் தேதி முதல் இரு பட்ஜெட்கள் மீதான விவாதமும் தொடங்கி, பிப்ரவரி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பிப்ரவரி 22-ம் தேதி இரு அமைச்சர்களும் பதில் அளிக்கவுள்ளனர். தொடர்ந்து, நிதி ஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. 

இந்தாண்டு நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தமது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மேலும் பட்ஜெட்டில் ‘மாபெரும் 7 தமிழ்கனவு’ என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம் என்பது உள்ளிட்ட 7 சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

கடந்தாண்டு பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow