மீண்டும் பி.டி.ஆருக்குக் கட்சியில் முக்கியத்துவம்... மாநிலங்களவை மூலம் டெல்லிக்கு அனுப்பும் பிளான்
2024 மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் திமுக அறிக்கை தயாரிப்பு குழு, மக்களவைத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழு என 3 குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது.
2024 தேர்தலுக்கு அதிரடியாகக் களமிறங்கியுள்ள திமுக தற்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவும், பணிகளை ஒருங்கிணைக்க கே.என்.நேரு தலைமையில் ஒரு குழுவும், அறிக்கை தயார் செய்யக் கனிமொழி தலைமையில் ஒரு குழுவும் என மூன்று குழுவை அமைத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. 2016, 2019 மற்றும் 2021 தேர்தல்களில் அறிக்கை தயார் செய்யும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் அ.ராமசாமி தற்போது உயர் கல்வித்துறையில் பொறுப்பில் இருப்பதால் அவர் பட்டியலில் இடம்பெறவில்லை.
கனிமொழி மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் மட்டுமே கடந்த 2016, 2019 மற்றும் 2021 தேர்தல்களில் அறிக்கை குழுவில் இடம்பெற்றிருந்தனர். தற்போது உள்ள அனைவருமே புதியவர்களே. தேர்தல் அறிக்கை தான் தேர்தல்களில் திமுகவின் கதாநாயகன் என்ற பேச்சு உள்ளது அந்த வகையில் அறிக்கை தயார் செய்யும் குழு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குழுவாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இலாகா மாற்றம் மதுரை மாவட்டச் செயலாளர் தேர்வில் தனது ஆதரவாளருக்குப் பதவி வழங்கவில்லை, ஆடியோ விவகாரம் என தொடர்ச்சியாக பி.டி.ஆர் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவில் இடம்பிடித்துள்ளார் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
30வயதில் வலம்புரிஜானை மாநிலங்களவை உறுப்பினராக்கவும், 35வயதில் ஆ.ராசாவை மத்திய அமைச்சராக்கவும் முரசொலி மாறன், வைகோ, திருச்சி சிவா உள்ளிட்டோரை டெல்லியில் முகங்களாக மாற்றிய கருணாநிதி பாணியில் ஒரு வேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்டியமைக்கும் பட்சத்தில் பிடி ஆர் மாநிலங்களவை மூலம் அமைச்சரவையில் இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் லோக்கல் பாலிடிக்ஸ் பிடிஆருக்கு சரிவராத சூழலில் மதுரையில் சில மூத்த உடன்பிறப்புகளும் எதிர்ப்பு முகமே காட்டி வருகின்றனர். தரவுகளோடு பேசக்கூடிய பி.டி.ஆரை கைவிடவும் கட்சி தயாரில்லாத நிலையில் மறப்போம் மன்னிப்போம் என்ற பேரறிஞர் அண்ணா வழியில் வரும் வரும்காலத்தில் கையோடு கரம் சேர்த்து டெல்லியின் முகமாக மாறுவாரா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகே தெரியவரும்.
What's Your Reaction?