முன்னாள் டிஜிபி நட்ராஜ் வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு

வேறொரு நீதிபதி முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும்

Jan 19, 2024 - 18:34
முன்னாள் டிஜிபி நட்ராஜ் வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து வாட்ஸ் அப் குழுக்களில் அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கிலிருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள கோயில்களை இடித்த தமிழக அரசு பற்றியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும், முன்னாள் டிஜிபி-யும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான ஆர்.நட்ராஜ் வாட்ஸ் அப் குழுக்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஷீலா என்பவர் திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நட்ராஜ் தரப்பில் அதே வாட்ஸ் அப் குழுக்களில் தன்னை பற்றியும் அவதூறாக பேசுவதாகவும், தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும், ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, காவல்துறை விசாரானைக்கு தடை விதித்ததுடன், ஒரு புகார் தொடர்பாக விசாரிக்கும்போது மற்றொரு குற்றம் நிகழ்ந்தால், புகார் கொடுக்கும் வரை காவல்துறை நடவடிக்கை எடுக்காதா? என கேள்வி எழுப்பி, நடராஜ் தெரிவிக்கும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே நீதிபதிகள் சுழற்சி முறையின் அடிப்படையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜனவரி 19) விசாரணைக்கு வந்தபோது, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் விலகலால், வேறொரு நீதிபதி முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow