நன்றிக்கு இலக்கணமான மாணவன்.. ஆசிரியரின் மகனான IAS அதிகாரி.. கல்விக்கு கைமாறாக செய்த செயல்
தனக்கு பாடம் சொல்லி கொடுத்த தமிழ் ஆசிரியர் இறந்த பிறகும் அவரது குடும்பத்தைத் தாங்கி நிற்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தலைமகனாக இருந்து அவர் ஆற்றும் இந்த செயல் நன்றிக்கு இலக்கணமாக பார்க்கப்படும் நிலையில் யார் அந்த அதிகாரி? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றியவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன். சமூகம் சார்ந்த செயல்களில் அக்கறை காட்டுவதுடன் தமிழ் மீது பெரும் பற்றுக் கொண்டவராக பாலச்சந்திரன் திகழ்கிறார். இதற்கு காரணம் அவரது தமிழ் ஆசிரியர் ராமசாமி தான். திண்டுக்கல் சென்ட் மேரீஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் கல்வி பயின்றார் பாலசந்திரன். அப்போது அதே பள்ளியில் 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியராக ராமசாமி என்பவர் பணியாற்றினார். இருவரையும் தமிழ்ப்பற்று அன்புக்குரியவர்கள் ஆக்கியது.
பாலச்சந்திரனுக்கு தமிழ் மீதும், நடிப்பு மீதும் ஆர்வம் இருந்ததை அறிந்துகொண்ட ஆசிரியர் ராமசாமி, அவரை பல மேடைகளில் ஏற்றி அழகு பார்த்துள்ளார். மேலும், அவரது அசாத்திய திறமைகளை தனது மனைவி பட்டுவிடமும் கூறி சிலாகித்துள்ளார். இதையடுத்து உயர்படிப்பு முடித்த பாலச்சந்திரன், ஐஏஎஸ் தேர்வு எழுதி ஆட்சியராக பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் ஆசிரியர் ராமசாமியும் பணி ஓய்வு பெற்று தனது குடும்பத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் நேமம் கிராமத்துக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அவர் இருக்கும் இடத்தை பாலச்சந்திரன் தேடிப் பிடித்து சென்று ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியரை சிறப்புரையாற்ற வைத்தும் அழகுப் பார்த்துள்ளார்.
அதற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறையாவது ராமசாமி வீட்டுக்கு சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்து வந்தார் பாலசந்திரன். இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டில் ஆசிரியர் ராமசாமி வயது மூப்பு காரணமாக காலமானார். மகள்கள் 5 பேர் மட்டுமே இருந்த நிலையில், தனக்குப் பிறகு உன்னை யார் கவனித்துக் கொள்வார் என மனைவி பட்டுவிடம் ஆசிரியர் ராமசாமி, முன்பு ஒருமுறை கவலைப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு மூத்த மகன்போல் பட்டுவை காண அடிக்கடி வரத் தொடங்கினார் பாலசந்திரன்.
தற்போது ஆசிரியர் ராமசாமியின் மனைவி பட்டுவுக்கு 80 வயதான நிலையில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் கிராமத்தில் தனது பேரனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தஞ்சாவூர் வந்த பாலசந்திரன், பட்டுவின் வீட்டிற்கு சென்று அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
மேலும், மருந்து மாத்திரை வாங்க முடியாமல் பட்டு அவதியடைந்து வருவதை அறிந்த பாலச்சந்திரன், பேரன் சரவணினிடம் 45 ஆயிரம் ரூபாய் கொடுத்து கறவை மாடு வாங்கி, அதில் வரும் வருமானத்தில் பாட்டியை கவனித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆசிரியரால் தான் ஆளேனேன், அவரது குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டியது எனது கடமை என பாலசந்திரன் கூறியது பட்டுவின் குடும்பத்தினரை ஆனந்தக் கண்ணீர் சிந்த வைத்தது.
வீட்டில் மேற்கூரையின் ஓடுகள் உடைந்து ஓட்டையாக இருப்பதை ஏதேச்சையாக கவனித்த பாலசந்திரன், வீட்டை சீரமைத்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து ஆசிரியர் ராமசாமியின் மனைவி பட்டு கூறும்போது, பாலசந்திரன் என் வயித்துல பிறக்காத மூத்த பிள்ளை… அவர்தான் எங்களுக்கு பால் வார்த்து வராருனு” கண்ணீர் ததும்ப கூறினார் .
பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியருடன் கடைசி வரை இணக்கமாக இருந்த பாலச்சந்திரன், ஆசிரியர் மறைவிற்கு பிறகும் அவரது குடும்பத்தை அன்பு பொங்க கவனித்து வருவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், அந்த உயரங்களுக்கு அடித்தளம் இட்டவர்கள் ஆசிரியர்கள். அவர்களை எப்போதும் உள்ளத்தில் வைத்து தாங்க வேண்டும் என்பதை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் உணர்த்தியுள்ளார்....
What's Your Reaction?