ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றாத நபர்.. RBI,மத்திய அரசுக்கு மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..

May 2, 2024 - 21:18
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றாத நபர்.. RBI,மத்திய அரசுக்கு மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..

பணமதிப்பிழப்பின் போது மாற்ற முடியாத ரூ.1.17 கோடி மதிப்பிலான ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ஏற்க தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் RBI மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரையை சேர்ந்த அஜய் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "நான் பருத்தி பஞ்சு மற்றும் நூற்பாலைகளில் இருந்து நூலை பெற்று வேறு தொழில்சாலைகளுக்கு அதனை விற்பனை செய்து வருகிறேன். ஆண்டுதோறும் முறையாக வருமான வரி செலுத்துகிறேன். 

இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு கடைசி தேதியான டிசம்பர் 30 அன்று ரூ.1.17 கோடியை மாற்றுவதற்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்குக் சென்றேன். ஆனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 4.30 மணி அளவில் இணைய கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும்  மத்திய அரசிடம் வலியுறுத்தி பணத்தை மாற்றுவதற்காக கால அவகாசம் பெற்று தருவதாகவும் வங்கியின் மேலாளர் கூறினார். ஆனால் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

இதுகுறித்து  ரிசர்வ் வங்கிக்கு பலமுறை மனு அனுப்பிய நிலையில், எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்த சூழலில் நூல் வாங்கிய நிறுவனத்திற்கு என்னால் கட்டணம் செலுத்த முடியாத நிலை உருவானது. இதனால் அவர்கள் என் மீது கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடியபோது, மத்திய அரசின் உத்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அது தொடர்பான நிவாரணம் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே, என்னிடம் உள்ள ரூ.1.17 கோடியை மீண்டும் ஏற்க தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என அஜய் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அமர்வில் இன்று (மே-2) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்காக முயற்சித்த அனைத்தும் ஆதாரங்களையும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow