நியோமேக்ஸ் வழக்கு - வழக்கறிஞர்கள் குழுவுக்கு இடைக்கால தடை!
விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் குழுவை நியமிக்க அதிகாரம் உள்ளதா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் நியமனம் செய்த வழக்கறிஞர்கள் குழுவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நியோமேக்ஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் புகார்தாரர்களிடம் இருந்து மனுக்கள் பெற பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் வழக்கறிஞர்கள் குழுவை நியமித்தது.
இதனிடையே வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நியோமேக்ஸ் இயக்குநர் கமலக்கண்ணன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகரை சேர்ந்த ரவிசங்கர் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தென்மண்டல பொருளாதார குற்றவியல் கண்காணிப்பாளர் பாகெர்லா கல்யாண், நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார்.
அப்போது, பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் வழக்கறிஞர் குழுவை நியமனம் செய்தது எவ்வாறு? எனவும் விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த அதிகாரம் உள்ளதா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து வழக்கறிஞர் குழுவை நியமனம் செய்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை அரசுடைமையாக்கி அறிவிப்பாணை வெளியிட வேண்டும் எனவும் தவறினால் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதி தண்டபாணி எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?