'அண்ணன் சீர் திட்டம்' அதிரடி அறிவிப்பு: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை பெற உடனே விண்ணப்பியுங்கள்!
முதலமைச்சர் விஜய் அறிவித்த திட்டங்களில் ஒன்றான அண்ணன் சீர் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான 'அண்ணன் சீர் திட்டத்தை' செயல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன் பெற, மணமக்கள் திருமணத்திற்கான குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதோடு, குடும்ப அட்டையில் (Ration Card) மணப்பெண்ணின் பெயர் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும், திருமண நிதியுதவிக்கான வேறு எந்த அரசுத் திட்டங்களிலும் ஏற்கனவே பயன் பெறாதவராக இருத்தல் அவசியம். திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் திருமணத்தை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி முதல் நடைபெறும் திருமணங்களுக்கு, 2027-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கச் சிறப்பு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது திருமண அழைப்பிதழைப் பதிவேற்றம் செய்வதுடன், விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகியவை சரிபார்க்கப்படும்.
தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் விண்ணப்பதாரருக்குக் குறுஞ்செய்தி (SMS), வாட்ஸ்-அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக உடனுக்குடன் தெரிவிக்கப்படும். ஒருவேளை தகுதியற்ற காரணங்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படுவதோடு, விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
What's Your Reaction?