மதுரை சித்திரை திருவிழா.. கள்ளழகரை காண வரும் பக்தர்களுக்கு என்னென்ன ஏற்பாடு.. மதுரை ஐகோர்ட் உத்தரவு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பாதுகாப்புகள் குறித்து அதிகாரிகள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 21ம் தேதியும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் ஏப்ரல் 23ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் போது போதுமான அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், மொபைல் மருத்துவ சேவைகளை வழங்கவும், மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் திருக்கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். சித்திரை திருவிழாவின் போது சப்பரம் செல்லும் பகுதிகளில் சாலை வசதி முறையாக செய்யப்பட்டு இருப்பதையும், முறையான மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளதையும் உறுதிபடுத்த வேண்டும் என ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சித்திரை திருவிழா பாதுகாப்பு குறித்து எவ்வளவு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசு தரப்பில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், காவல்துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.
What's Your Reaction?