ஓட்டு போட சொந்த ஊர் போறீங்களா.. ஏப்.19ல் சம்பளத்துடன் விடுமுறையா..? தேர்தல் ஆணையம் சொல்வது என்ன..?
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளான வரும் 19ஆம் தேதி ஓட்டு போடுவதற்காக விடுமுறை விடப்படுமா என தனியார் நிறுவன தொழிலாளர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே அன்றைய தினம் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வாக்களிப்பதற்காக விடுமுறை அளிக்கப்படுமா என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதற்கு பதில் என்னவென்றால், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகமும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி நிறுவனங்கள்) மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம் (BPO) நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தொடர்பான புகார்களை 9444221011 என்ற எண்ணில், தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் எம்.பி.கார்த்திகேயனை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.
இதேபோல், சென்னை - 6374160918, செங்கல்பட்டு - 9025155455, காஞ்சிபுரம் - 86672 22871, திருவள்ளூர் - 9952000256 என்ற எண்களில் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால், 3 நாள் தொடர் விடுமுறைக்காகவும், ஓட்டு போடுவதற்காகவும், மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் படையெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?