தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்-பின்னணி என்ன?

கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது தந்தை குறித்த புத்தகத்தை எழுதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Jan 13, 2024 - 23:41
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்-பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை நியமிக்கப்பட்டுள்ளார்.அது குறித்த பின்னணியை பார்ப்போம்.

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்ததும், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். மூன்றாவது  ஆண்டை நெருங்கும் நிலையில், சொந்த காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்து அரசுக்கு கடிதம்   அனுப்பினார்.

அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்த அரசு, புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை நியமிக்கவும் பரிந்துரைத்தது.

இதனையேற்று, அவரை தலைமை வழக்கறிஞராக நியமித்து ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.இதற்கான அரசாணையை அரசின் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்தார்.இந்த பொறுப்பை பி.எஸ்.ராமன் ஏற்பது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த 2009 முதல் 2011ம் ஆண்டு வரை, முதல்வராக இருந்த மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தனது 49வது வயதில் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்திருக்கிறார்.

கடந்த 1970ம் ஆண்டுகளில் தமிழக தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த வி.பி.ராமனின் மகன் இவர். கடந்த  1960 ம் ஆண்டு பிறந்த பட்டாபி சுந்தர் ராமன் என்கிற பி.எஸ்.ராமன், பரத் ராமன் என்றும் அழைக்கப்படுகிறார்.  இவர், சென்னை வித்யா மந்திர் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பையும், சென்னை சட்டக்கல்லூரியில்  சட்டப்படிப்பையும் முடித்தார்.
 அரசியல் சட்டம், உரிமையியல், வணிகம், குற்றவியல், சொத்து சட்டங்கள், நேரடி வரிகள், அறிவுசார் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றும் பி.எஸ்.ராமன், கடந்த 2004ம் ஆண்டு 44 வயதில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், புத்தகம் வாசித்தல், இசை, சினிமா, உடலை உறுதியாக வைத்திருப்பது ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்.கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது தந்தை குறித்த புத்தகத்தை எழுதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow